Spread the love

மாநாடு 27 May 2022

ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் ஆனால் இந்த ஆண்டு அதற்கு முன்னதாக கடந்த 24 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குருவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணை 1925 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி 1934 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு முதன்முதலாக ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இதுவரை குறிப்பிட்ட தேதியில் 18 முறை தான் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேட்டூரில் இருந்து வரும் தண்ணீர் 12 மாவட்ட விவசாய நிலங்களை செழுமையாக்கும், இதனால் டெல்டா மாவட்டத்தில் உள்ள 6 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

ஆனால் தமிழ்நாட்டில் எந்த ஆறும் சரிவர தூர்வாரப்படாமல் இருப்பதால் வருகின்ற தண்ணீர் முழுமையாக விவசாயத்திற்கு பயன்படுமா என்பது கேள்விக்குறிதான்.இந்நிலையில் தஞ்சாவூர் நகர பகுதியை இணைக்கும் இரண்டு ஆற்றுப்பாலங்கள் ஒன்று இர்வின் ஆற்றுப் பாலம் மற்றொன்று கருந்தட்டங்குடியில் உள்ள வடவாறுப் பாலம் இவை இரண்டும் இடிக்கப்பட்டு புதிதாக கட்டும் வேலைகள்

நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட இருக்கிறது அதனையொட்டி இன்னும் விரைவாக பாலங்கள் துரிதகதியில் கட்டி முடிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். இருப்பினும் ஏற்கனவே வெண்ணாறு மணல் திட்டுகளாளும், கோரைப்புற்களாளும், ஆறு என்கிற அடையாளத்தை பல இடங்களில் இழந்து நிற்கிறது அதன் காரணமாக வருகின்ற தண்ணீர் விவசாயத்திற்கு முழுமையாக பயன் பட வாய்ப்பு இல்லை என்பதே உண்மை.

வெண்ணாறு தூர்வார சென்றாண்டு ஒதுக்கப்பட்ட நிதிகளை முறையாக பயன்படுத்தவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. .அதனைத்தொடர்ந்து கரந்தை வடவாறும் ஆகாயத்தாமரையால் நிரம்பி வழிகின்றது. என்பதை

வழிப்போக்கர்கள் விழியில் காணும்போது வழி அமைத்துக் கொடுக்க வேண்டிய அதிகாரிகளும், அமைச்சர்களும் ,ஒதுக்குவதிலும், பதுக்குவதிலும் காட்டும் ஈடுபாட்டை மக்கள் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் திட்டங்களிலும் காட்டினால் மட்டுமே திட்டங்களின் பயன் முழுமையாக பொதுமக்களுக்கு சென்றடையும். இல்லையென்றால் சீனி சர்க்கரை சித்தப்பா ,சீட்டில் எழுதி நக்கப்பா என்கிறது போலாகிவிடும். பல திட்டங்களும் துவங்கப்படுகிறது ஏட்டில் இருக்கிறது நாட்டில் அது செயல்படுத்தப்படுகிறதா? என்பதனை துறைசார்ந்த அதிகாரிகளும் அமைச்சர்களும் ஆய்வு செய்து நடைமுறைப்படுத்தினால் மட்டுமே நாட்டிற்கு நன்மை பயக்கும்.

நன்மை செய்வார்களா நம்மவர்கள் பொருத்திருந்து பார்ப்போம்

36460cookie-checkதஞ்சையில் இதையும் தாண்டி பாயுமா தண்ணீர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!