மாநாடு 29 May 2022
தஞ்சாவூர் கீழவாசலில் அமைந்துள்ள சுந்தரம் மஹால் திருமண மண்டபத்தில் தஞ்சை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் விஜய் சரவணனின் தாயார் திருமதி பஞ்சவர்ணம் அம்மாள் அவர்களின் திருவுருவப் படத்திறப்பு விழா இன்று நடைபெற்றது .அதில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பல மாவட்டங்களில் இருந்தும் பெரும்பான்மையாக வந்திருந்தார்கள், திருவுருவப்படத்தை திறந்து வைப்பதற்காக தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் புஸ்ஸி ஆனந்த் வருகை தந்திருந்தார்.
இந்நிகழ்வில் குத்துவிளக்கேற்றி மலரஞ்சலி செலுத்தி நிகழ்வை தொடங்கி வைப்பதற்காக தஞ்சை மாநகர தந்தை சன்.ராமநாதன் வருகை தந்திருந்தார் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும், பிரபலங்களும், பொதுமக்களும், தஞ்சை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும், ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் மாவட்ட தலைவர் ரஜினி கணேசன் ,,அஜித் நற்பணி மன்றத்தின் மாவட்டத் தலைவர் வின்சன்ட், சூர்யா நற்பணி மன்றத்தின் மாவட்ட தலைவர் வாசிம் ராஜா, உள்ளிட்டவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள். வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகவும், நாமெல்லாம் தவம் இருக்காமல் தானே அமைந்த சொந்தமாம் தனது தாயைப் பற்றிய நினைவுகளை நெகிழ்ச்சியோடு விஜய் சரவணன் இவ்வாறு பேசினார்.
ஒருவருக்கும் தனது அம்மா தான் ஸ்பெஷல், எனக்கும் என் அம்மா தான் ஸ்பெஷல், என் அம்மாவிற்கும் நான் தான் மிகவும் செல்லப்பிள்ளை ,இது என் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்குமே தெரியும், எங்களது குடும்ப நண்பர்கள் அனைவருமே இதனை அறிவார்கள். நம் அம்மா இருக்கும்போது பல நேரங்களில் அவர்கள் மனது கஷ்டப்படும் படி பேசி விடுகிறோம் ,அதுபோல நானும் சில நேரங்களில் எனது சூழ்நிலையின் காரணமாக கோபமாக என் அம்மாவிடம் பேசியிருக்கிறேன் ,ஆனால் எனது அம்மா என்னை விட்டு மறைந்து இயற்கை எய்த உடன் கடந்த 25 நாட்களில் நான் எவ்வளவு பெரிய இழப்பை சந்தித்திருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் கூற முடியாது ,ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு மணித்துளியும் எனக்கு என் அம்மாவின் நினைவு தான் இருக்கிறது எனவே இங்கு இருக்கின்ற இளைய பிள்ளைகள் யாருமே தனது தாயை எந்த விதத்திலும் கஷ்டப்படுத்தி விடாதீர்கள், இருக்கும்போது தெரியாது அவர்களின் அருமை, இல்லாதபோது எங்குமே கிடைக்காது அவர்களின் அரவணைப்பு என்பதை உணர்ந்து இளைய பிள்ளைகள் நடந்து கொள்ள வேண்டும் .எனது தாயின் படத்திறப்பு விழாவிற்கு பெருந்திரளாக வருகை புரிந்த அனைவருக்கும் எனது நன்றி என்று கண் கலங்கிய நிலையில் கூறினார்.
அதனைத் தொடர்ந்து தஞ்சை மாநகரத்தின் மேயர் சன்.ராமநாதன் உரையாற்றினார் அவர் பேசியதாவது:
உலகத்தில் எதைக் கொடுத்தும் வாங்க முடியாத உறவு தாய் எனது அம்மா கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பாக கொரோனா காலகட்டத்தில் இயற்கை எய்தினார் அதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பாக எனது தந்தை இயற்கை எய்தினார் .அவர் மரணத்தின் துக்கம் கூட 6 மாதத்தில் என்னை விட்டு கடந்துவிட்டது, ஆனால் என் அம்மா என்னை பிரிந்தது நான் செத்து சுடுகாடு செல்லும் வரையிலும் அந்தத் துன்பம் என்னை வாட்டிக் கொண்டே தான் இருக்கும். ஒவ்வொரு அம்மாவும் தனது பிள்ளைகள் உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும் என்று நினைப்பார்கள், அப்படிதான் என் அம்மாவும் நினைத்தார்கள் நானும் இன்னும் மேன்மையான நிலைக்கு உயர்ந்த பிறகு நமது அம்மாவை இன்னமும் சிறப்பாக வைத்து கவனித்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்திருந்தேன் ஆனால் எதிர்பாராத விதமாக சென்ற ஆண்டு என் அம்மா இறந்துவிட்டார் உங்களுக்கெல்லாம் தெரியும் மாநகர மேயர் என்பது எவ்வளவு பெரிய பொறுப்பு என்று இந்த பொறுப்பை தஞ்சை மக்கள் எனக்கு அளித்தபோது என் உணர்வு முழுவதும் என் அம்மாவே நிறைந்திருந்தார் ,என் கண்கள் என் அம்மாவையே தேடியது என்னை அழைத்துப் போய் மேயர் இருக்கையில் அங்கி அணிவித்து அமர வைத்தார்கள் 108 பவுன் தங்கத்தை கொடுத்தார்கள் ,இதை அனைத்தையும் என் அம்மாவிடம் காட்டி உனது மகன் இந்த நிலைக்கு உயர்ந்து இருக்கிறேன் என்று சொல்லி அவர்களை மகிழ்விக்க மனம் ஏங்கியது, ஆனால் இதையெல்லாம் கேட்கவும் ,பார்க்கவும் அம்மா உயிரோடு இல்லை என்றாலும் என்னோடு எப்போதுமே என் அம்மா இருக்கிறார் என்ற உணர்வு என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது.அந்த 108 பவுன் தங்கத்தை மாநகராட்சி வளாகத்தை விட்டு வெளியே எடுத்துச் சொல்லக் கூடாது என்பது விதி. இருப்பினும் என் அம்மாவுக்கு முன் எந்தவித விதிமுறைகளும் என் கண்ணுக்குத் தென்படவில்லை, பதவி ஏற்பு முடிந்தவுடன் உடனடியாக காரில் ஏறி நேராக சென்று என் அம்மா படத்திற்கு முன் நின்றேன் ,என்னால் உணர்ச்சியை அடக்க முடியவில்லை ஒரு அம்மாவின் பாசம் என்பது எதனோடும் ஒப்பிடமுடியாதது நான் காலையில் எழுந்ததிலிருந்து சிறுது நேரம் கூட எனக்கு எதுவும் தராமல் இருக்க மாட்டார் .சிறிது நேரத்தில் சூப்பு கொடுத்து குடிக்கச் சொல்வார் ஏதாவது கொடுத்துக் கொண்டே இருப்பார் இதை சாப்பிடு என்று. சில நேரங்களில் இட்லி வைக்கும் போது 3 இட்லி வைத்துவிடுவார், அப்போது நான் கோபமாக கூட திட்டியிருக்கிறேன், இவ்வளவு வைத்தாள் எப்படி சாப்பிட முடியும் என்று கோபப்பட்டு இருக்கிறேன், ஆனால் இன்று என் அம்மா இல்லை. என் மனைவி 2 இட்லி வைப்பார்கள் இன்னொரு இட்லி வேண்டுமென்று நானே கேட்டு வாங்க வேண்டிய சூழல் இருக்கிறது இதையெல்லாம் நான் ஏன் உங்களிடம் சொல்கிறேன் என்றால் அம்மா இருக்கும்போதே நீங்களெல்லாம் வாழ்க்கையில் வெற்றி பெற்று விடுங்கள் .அந்தத் தாய் மனது மிகவும் மகிழும். அம்மாவை எக்காரணத்தைக் கொண்டும் எதற்காகவும் கஷ்டப்படுத்தி விடாதீர்கள் .இங்கு நிரம்பி இருப்பவர்கள் பல பேருக்கு திருமணம் ஆகியிருக்கும் உங்களுக்கெல்லாம் புரியும் அம்மாவிற்கு நிகர் வேறு யாருமே இருக்க முடியாது என்று இன்றும் கூட எனது அலைபேசியில் என் தாயின் படத்தை தான் முகப்பு படமாக வைத்திருக்கிறேன்.
காலையில் எழுந்தவுடன் என் தாயின் முகத்தில் தான் முழிப்பேன் எனவே ஒவ்வொரு உறவும் உன்னதமானது .அம்மா இருக்கும் போதே நம் அம்மா நாம் எந்த நிலைக்கு வரவேண்டும் என்று கனவு கண்டாரோ அந்த கனவை காப்பாற்றி உயர்ந்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். அம்மா இருக்கும் போது பெறாத வெற்றி ஒரு வெற்றியாகவே இருக்காது என்பதை நான் நன்கறிவேன்.
அனைவரும் தாயை போற்றுவோம் நண்பர் விஜய் சரவணனும் அவரது அம்மாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் .தஞ்சை மக்கள் எந்த குறையாக இருந்தாலும் என்னை அலுவலகத்தில் வந்து சந்தித்து முறையிடலாம், உங்களுக்காக பணியாற்றவே என்னை நீங்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள் என்று நன்கறிவேன் என்று அவர் பேசிய எதார்த்தமான பேச்சு உள்ளம் இருந்த அத்தனை பேரையும் உருக வைத்தது நெஞ்சம் இருக்கும் அத்தனை பேரையும் நெகிழ வைத்தது.
அதன் பிறகு விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் புஸ்ஸி ஆனந்த் இவ்வாறு பேசினார் .
விஜய் சரவணனுக்கு தளபதி எப்போதுமே துணையாக இருக்கிறார் .நானும் நமது மன்ற நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும் அத்தனை பேரும் உங்களோடு இருக்கிறோம். எந்த ஆறுதல் சொன்னாலும் தாயின் இழப்பை ஈடு செய்ய முடியாது என்பது தெரியும் இயற்கையை வெல்ல நம்மால் முடியாது அம்மாவின் ஆன்மா சாந்தி அடையட்டும் என்றார் இதனைத் தொடர்ந்து பல பிரபலங்களும் தங்களது நினைவுகளையும் இந்நிகழ்வில் பகிர்ந்துகொண்டார்கள். உண்மையிலேயே தாய் என்பவள் ஒவ்வொருவருக்கும் தவமின்றி கிடைத்த வரம் .
பஞ்சவர்ணம் அம்மாள் அவர்களுக்கு மாநாடு இதழ் மலர் வணக்கம் செலுத்தி வணங்குகிறது.