மாநாடு 9 June 2022
தஞ்சாவூர் நகரத்தை இணைக்கும் முக்கிய பாகங்களான 2 ஆற்று பாலங்களையும் இடித்துவிட்டு புதிதாக பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற இருப்பதால் பயணிகள் போக்குவரத்துகளை மாற்றுப்பாதையை பயன்படுத்தி ஒத்துழைப்பு தரும்படி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி பத்திரிகைகளின் வாயிலாக கேட்டுக்கொண்டார்.
அதன்படி மார்ச் மாதம் 16ம் தேதி பாலங்கள் துண்டிக்கப்பட்டது. தஞ்சாவூர் நகரத்திலுள்ள இர்வின் ஆற்றுப் பாலம் பகுதியை கடக்க வேண்டியவர்கள் கோர்ட் சாலையையும், மறுபுறத்தில் உள்ளவர்கள் சுற்றுலா மாளிகை சாலையையும் சில நாட்கள் பயன்படுத்தி வந்தார்கள் .அதன்பிறகு இரு சக்கர வாகனங்களை இயக்கும்படி ஆற்றின் குறுக்கே பாதைகள் அமைத்துத் தரப்பட்டது இதுவரை அந்த பாதையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றார்கள்.
ஆனால் கருந்தட்டாங்குடி வடவாறு பாலத்திற்கு மாற்று பாதையாக மாவட்ட நிர்வாகத்தால் ஏற்கனவே இருந்த பழைய திருவையாறு சாலையை பொதுமக்கள் பயன்படுத்தும் படி கூறப்பட்டிருந்தது, மாற்று பாதையாக பயன்படுத்துவதற்காக அந்த சாலையை செப்பனிடும் பணிகளும் நடைபெற்றதாக கூறப்படுகிறது, ஆனால் மாற்றுபாதையாக அறிவித்த நாள் முதல் அந்தப் பாதை சரிவர செப்பனிட வில்லை அந்தப் பாதை குண்டும் குழியுமாக இருக்கிறது, என்றும் அந்த பாதையின் நடுவே குளம் போல் இருந்த இடத்தை சுட்டிக்காட்டியும் நமது மாநாடு இதழில் புகைப்பட ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
அப்போது அந்த மண்டலத்தின் உதவி பொறியாளராக இருந்த அறச்செல்வி அவர்களை தொடர்பு கொண்டும் இது குறித்து கேட்டு அவர்கள் உடனடியாக சரி செய்து விடுவதாக கூறியதையும் ஓரிரு நாட்களில் குளம் போல் தேங்கி சாலையை துண்டிக்கும் விதமாக இருந்த பள்ளத்தை சரி செய்ததையும் நமது மாநாடு இதழில் செய்தியாக வெளியிட்டு அந்த சாலை முழுவதும் உள்ள மேடு ,பள்ளங்களையும் புகைப்படம் எடுத்து போட்டு சரி செய்து பொதுமக்களுக்கு நல்ல பாதையை பயன்படுத்த தருமாறு கேட்டிருந்தோம்.
இந்த பாதை தற்போது மிகவும் பழுதடைந்து போக்குவரத்து செல்ல முடியாத அளவிற்கு மோசமாக இருப்பதால் மகிழுந்து போன்ற வாகனங்கள் அந்தப் பாதையைப் பயன்படுத்துவதை தவிர்த்து இந்தப் பகுதியில் பொதுமக்களுக்கு இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்வதற்காக வடவாறு நடுவே மாவட்ட நிர்வாகத்தால் அமைத்து தரப்பட்ட சிறிய பாதையில்
மகிழுந்துகளும், ஆட்டோக்களும் செல்ல முயற்சி செய்து கடினப்பட்டு இயக்கி வருவதால் இந்தப் பாதையில் இருசக்கர வாகனத்தை இயக்கும் பெண்களும் ,முதியவர்களும் மிகவும் துன்பப்படுகிறார்கள் இந்த பகுதியில் காலை ,மாலை இரவு நேரங்களிலும் போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்பட்டு இந்தப் பாதையைக் கடப்பதற்கு மட்டும் ஏறக்குறைய 30 நிமிடங்கள் ஆகிவிடுகின்றன என்றும் அதுமட்டுமல்லாமல் சிலர் தடுமாறி கீழே விழுந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது, உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றும் அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் அல்லல் படுவதை தடுமாறி விழுவதை இனியும் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது .
பொதுமக்களை திரட்டி தனது தலைமையில் பாடை கட்டி ஒப்பாரி வைக்கும் போராட்டத்தை தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கம் நடத்தப்போவதாக அதன் நிறுவனத் தலைவர் ரவிச்சந்திரன் நம்மிடம் தெரிவித்தார். இந்த போராட்டத்தில் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களும் சமூக ஆர்வலர்களும் பங்கேற்பார்கள் என்று தெரியவருகிறது.
போக்குவரத்து பாதையைக் கூட போராடித்தான் பெற வேண்டும் என்பது மிகப்பெரிய அவலம். உழைக்கும் மக்களின் பணத்தில் ஊதியம் வாங்கும் அதிகாரிகள் ஊழியம் முறையாக பார்க்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.