மாநாடு 16 June 2022
தெரு வெளிச்சமாக இருப்பதற்காக எல்.இ.டி பல்பு போடுவதில் ஒரு கோடி ரூபாயை ஆட்டையை போட்ட 13 அதிகாரிகள் பிடிபட்டனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, தென்கரை, வீரபாண்டி, க.புதுப்பட்டி, உத்தமபாளையம், கோம்பை, மேலச்சொக்கநாதபுரம், பூதிப்புரம், தேவதானப்பட்டி, ஓடைப்பட்டி ஆகிய பேரூராட்சிகளுக்கு எல்.இ.டி பல்புகள் பொருத்துவதற்காக கடந்த 2019 – 2020 ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் கோரப்பட்டது.
அதனடிப்படையில் 36 வாட்ஸ் ஒளித்திறன் கொண்ட ஒரு எல்.இ.டி பல்பு 9,987 ரூபாய்க்கு வாங்குவதற்கு சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகங்கள் ஒப்புதல் வழங்கின.
இதன்படி 10 பேரூராட்சிகளுக்கு மொத்தம்1,300 பல்புகள், 1 கோடியே 29 லட்சத்து 83 ஆயிரத்து 100 ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளன. இந்த பல்புகளை கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டியில் இருக்கும் ஜே.ஆர். எலக்ட்ரிக்கல்ஸ் மற்றும் ரவி எலக்ட்ரிகல்ஸ் என்ற கடைகளில் இருந்து வாங்கப்பட்டிருக்கிறது.
இங்கு பல்பு வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது .இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநர் தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு உத்தரவிட்டார். லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆய்வில், கொள்முதல் செய்யப்பட்ட இந்த வகை எல்.இ.டி. பல்பு ஒன்றின் குறைந்தபட்ச விலை 1200 ரூபாயில் இருந்து அதிகபட்சம் 2500 ரூபாய் வரை மட்டுமே இருக்கும் என கண்டறியப்பட்டதுள்ளது. 1 பல்புக்கு கூடுதலாக 7487 ரூபாய்க்கு கணக்கு காட்டி கொள்முதல் செய்ததில் 97லட்சத்து 33ஆயிரத்து 100 ரூபாய் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதற்கு காரணமாக இருந்த தேனி மாவட்ட பேரூராட்சிகளின் முன்னாள் உதவி இயக்குநர் விஜயலட்சுமி மற்றும் பேரூராட்சி முன்னாள் செயல் அலுவலர்கள் ஆண்டிபட்டி – பாலசுப்பிரமணியன், தென்கரை – மகேஸ்வரன் உள்ளிட்ட 11 பேர் மற்றும் க.புதுப்பட்டியைச் சேர்ந்த ஜமுனா, ரவி ஆகிய ஒப்பந்ததாரர்கள் என மொத்தம் 13 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு மாவட்ட பேரூராட்சியில் எல்.இ.டி பல்பு போடுவதில் மட்டும் 1 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்றால் ஒவ்வொரு மாவட்டத்திலும் முறையாக கணக்கெடுத்தால் எத்தனை அதிகாரிகள் சிக்குவார்கள் இதுமதிரியான அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும். அது மட்டுமலலாமல் இவர்களை வேலைகளில் இருந்து நீக்க வேண்டும் . வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து விட்டு பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு இவர்களின் வேலையை அரசு கொடுக்க வேண்டும் . முறைகேடாக விலைபுள்ளி போட்டுக் கொடுத்த ஒப்பந்ததாரரின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த பல்பு விற்பனை செய்த அந்த கடைகளின் உரிமையாளருக்கு கடுமையான தண்டனை தர வேண்டும் .இதெல்லாம் செய்தால் மட்டுமே வழக்கு பதிந்ததற்கான அர்த்தம் இருக்கும், இல்லை எனில் வழக்கமான வழக்குப்பதிவாகவே இதுவும் கணக்கில் கொள்ள வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.