மாநாடு 16 June 2022
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அரணையூர் என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 70 ஆண்டுகளாக இயங்கி வந்திருக்கிறது,
இந்த பள்ளிக்கூடம் கடந்த 27 ஆண்டுகளாக பெற்றோர்களின் ஆங்கில மோகத்தால், ஆங்கில வழி கல்வி, தனியார் பள்ளிக்கூடத்தில் படித்தால் மட்டும் தான் தனது பிள்ளை அறிவாளி என்கிற மனநிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்ட காரணத்தினால்,
இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து இருக்கிறது. ஆசிரியர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது ,அரசுகளும் இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் கடந்த 27 ஆண்டுகளாக இந்த பள்ளிக்கூடம் மூடப்பட்டு இருந்திருக்கிறது.
இந்த பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள் உயர்பதவிகளில் இருப்பதாகவும் கூறப்படுகிறது .இந்த பள்ளிக்கூடத்தில் தான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 5ம் வகுப்பு வரை படித்தார் என்கிறார்கள்.
இந்த நிலையில் தற்போது ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற முனீஸ்வரி கணேசன் என்பவர் 27 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் இந்தப் பள்ளிக்கூடத்தை திறப்பதற்காக மக்களைக் கூட்டி பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி, ஒரு குழு அமைத்து, பல கட்டங்களாக திட்டங்களை வகுத்து ஆட்சியாளர்களையும், மாவட்ட அதிகாரிகளையும் சந்தித்து பூட்டிக் கிடக்கும் பள்ளிக் கூடத்தை திறந்து வைக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
ஆனால் 27 ஆண்டுகளாக பூட்டப்பட்டு, பாழடைந்து கிடக்கும் பள்ளிக்கூடத்தை பராமரித்து திறப்பதற்கு அரசின் நிதியை தர இயலாது என்று அதிகாரிகள் மறுத்து விட்டார்களாம்.
இதனைத் தொடர்ந்து அந்த கிராமத்தில் உள்ள பொதுமக்களிடம் குடி வரியாக 2 லட்சம் ரூபாய் வசூல் செய்து பள்ளிக்கூடத்தை பராமரிப்பு செய்து, புதுப்பித்து இருக்கிறார்கள். ஆங்கில வழி பள்ளியில் சேர்ப்பதை தவிர்த்து இந்த பள்ளிக்கூடத்தில் தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று பெற்றோர்களிடமும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
அதன்காரணமாக தற்போது 37 மாணவர்களுடன் புதுப் பொலிவுடனும், ,புத்தெழுச்சியோடும் அந்த பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. மாணவர்களுக்கு மதிய உணவுகளை கிராம மக்கள் உணவு விடுதியில் இருந்து வரவழைத்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பள்ளிக்கூடத்தை தொடர்ந்து நடத்த ஏதுவாக கழிவறைகள், குடிநீர், சுற்று சுவர், மதிய உணவு திட்டங்கள் உள்ளிட்டவற்றை அரசு வழங்கி உதவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
டாஸ்மாக்கிற்கு உதவிடும் அரசு, வாழ்க்கையில் பாஸ் மார்க் எடுக்க மாணவர்களுக்கு உதவிட வேண்டும் உதவுமா அரசு?