மாநாடு 24 June 2022
பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவில் நேற்று நடைபெற்றது அதிமுகவின் பொதுக்குழு. கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஓபிஎஸ் க்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பொறுத்து பொறுத்து பார்த்து பொறுமை இழந்த ஓபிஎஸ் இன் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் ஒலிவாங்கி முன்வந்து நின்று இந்த கூட்டம் சட்டத்திற்குப் புறம்பாக நடக்கின்றது, என்று கூறி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். அவரோடு ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்தார்கள்.
அதன்பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த வைத்தியலிங்கம் கூட்டுத் தலைமை தான் வேண்டும் அதற்காக எப்போது வேண்டும் என்றாலும் நாங்கள் பேசுவதற்கு தயாராக இருக்கின்றோம் என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து இன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்ட முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்துக்கு வரும் வழியில் அதிமுகவின் தொண்டர்கள் அமோக வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள் திருமானூரில் இருந்து தஞ்சாவூர் வருவதற்கு 3மணி நேரம் ஆகியதாம் மாலை 5 மணிக்கு தான் தஞ்சாவூர் வந்து சேர்ந்ததாக கூறினார்கள் வைத்தியலிங்கத்தின் விசுவாசிகள்.
இதைப்பற்றி அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மருத்துவக் கல்லூரி பகுதி துணைச் செயலாளர் சதீஷ்குமாரிடம் பேசினோம் அவர் விவரித்து கூறியதாவது:
இன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்ட சோழமண்டல தளபதி வைத்தியலிங்கம் அவர்களுக்கு வழிநெடுகிலும் கட்சி தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தார்கள்.அதன்படி விழுப்புரம் ,பெரம்பலூர் ,அரியலூர், பகுதிகளில் பெரும் வரவேற்பு கொடுக்கப்பட்டது, அதன் பிறகு
தஞ்சை எல்லை தொடங்கும் பகுதியான திருமானூர் பாலத்தில் இருந்து 400 வாகனங்களில் 4000 தொண்டர்கள் புடைசூழ எங்கள் சோழமண்டல தளபதியை தஞ்சைக்கு அழைத்து வந்தோம் திருமானூரில் இருந்து தஞ்சாவூர் வருவதற்கு ஏறக்குறைய 3 மணி நேரம் ஆகியது என்று பெருமிதத்தோடு நம்மிடையே கூறினார்.
தஞ்சை மேல வஸ்தா சாவடியில் இருந்து தஞ்சை தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் நாராயணி ஜவகர் சக்திவேல் சுமார் 200 இருசக்கர வாகனங்களில் வரவேற்பு கொடுத்து தமிழ்நாடு விடுதி வரை அழைத்து வந்ததாக தெரியவருகிறது.
தமிழ்நாடு விடுதிக்கு வந்தவுடன் தங்களது சோழமண்டல தளபதியை கண்ட உற்சாகத்தில் தொண்டர்கள் இபிஎஸ் துரோகி ஒழிக என்று முழக்கமிட்டு இருக்கிறார்கள், இந்தப் போக்கை கண்டிக்கும் விதமாக வைத்திலிங்கம் அப்படியெல்லாம் யாரும் முழக்கமிடக்கூடாது என்று கூறிய உடன் அதனை உடனே ஏற்றுக்கொண்டு தொண்டர்கள் அந்த முழக்கத்தை விட்டு விட்டு அம்மா புகழ் ஓங்குக, சோழமண்டல தளபதி வாழ்க என்ற முழக்கத்தை எழுப்பினார்கள்,
இதனைப் பார்க்கும்போது தளபதியின் பேச்சை தட்டாமல் கேட்கும் தொண்டர்கள் இன்னமும் வைத்தியலிங்கத்தோடு தான் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
ஆர்.டி.ராமச்சந்திரனும், வெல்லமண்டி நடராஜனும் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்துடன் சென்னையிலிருந்து வந்திருக்கிறார்கள்.