Spread the love

மாநாடு 30 June 2022

உதய்பூரில் கன்ஹையா லால் தேலியைப் படுகொலைக்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்டு இருக்கிறார் அதில் கூறியிருப்பதாவது : ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் தையல்கடை நடத்தி வந்த கன்ஹையா லால் தேலி என்பவரின் தலைதுண்டிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட கோரநிகழ்வு நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கருத்தை மாற்றுக்கருத்தாலும், அவதூறுகளை சட்டவழிமுறைகளாலும்தான் எதிர்கொள்ள வேண்டுமே ஒழிய, வன்முறைத்தாக்குதல்களும், மனிதப்படுகொலைகளும் ஒருபோதும் அதற்குத் தீர்வாகாது. ஒரு உயிரைப் பறித்திடும் கொலைவெறிச்செயலை எதன்பொருட்டும் நியாயப்படுத்த முடியாது. சாதியின் பெயரால் நடக்கும் ஆணவக்கொலைகளையும், மதத்தின் பெயரால் நடக்கும் அடிப்படைவாதக் கொலைகளையும் ஒருநாளும் ஏற்க முடியாது. கன்ஹையா லால் தேலியின் உயிரைப் பறித்திட்ட இக்கொடுஞ்செயலுக்கு எனது வன்மையானக் கண்டனத்தைப் பதிவுசெய்கிறேன்.

அன்பையும், சமத்துவத்தையும், பரிவையும், கருணையையும் போதிக்கும் மார்க்கத்தைத் தழுவிக்கொண்டு, அந்த மார்க்கத்தின் பெயரைச் சொல்லி நடத்துகிற இத்தகையக் கீழான வன்முறைச்செயல்பாடுகளுக்கு அம்மார்க்கமும், அம்மார்க்கத்தைத் தழுவி நிற்கும் பல கோடிக்கணக்கான மக்களும் பொறுப்பேற்க முடியாதென்றாலும், அவர்களை வன்முறையாளர்களாகச் சித்தரித்து, குற்றப்படுத்தி, மதஒதுக்கல் செய்ய முனைகிற இந்துத்துவவெறியர்களின் தவறான முயற்சிக்கு இப்படுபாதகச்செயல் வலுசேர்க்கும். அடிப்படைவாதச்சிந்தனையாலும், வன்முறைப்பாதையாலும் தனிப்பட்ட இருவர் செய்திட்ட கோரக்கொலையைக் கொண்டு, ஒரு சமூகத்தையே குற்றவாளியாக்க முனையும் அரசியல் இலாபக்கணக்கீடுகளை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாதென இச்சமயத்தில் அறுதியிட்டுக்கூறுகிறேன்.ஆகவே, கன்ஹையா லால் தேலியைப் படுகொலை செய்திட்ட கொலையாளிகளுக்கு கடுஞ்சட்டத்தின் கீழ் உச்சபட்சத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டுமெனவும், இப்படுகொலையை வைத்து சமூகத்தை செங்குத்தாகப் பிளவுப்படுத்த முயலும் மதவாதிகளின் கொடுஞ்செயல்பாடுகளுக்கு இடமளிக்கக்கூடாதெனவும் நாட்டையாலும் ஆட்சியாளர்களை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியிருக்கிறார்.

40890cookie-checkபடுகொலைக்கு சீமான் கடும் கண்டனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!