மாநாடு 14 July 2022
கவிபேரரசு வைரமுத்து இலக்கியம் எழுத வந்து 50 ஆண்டுகள் நிறைகின்றது.இவரின் முதல் கவிதைநூலான வைகறை மேகங்கள் கவியரசு கண்ணதாசன் அணிந்துரையோடு 1972இல் வெளிவந்தது.அவர் அப்போது பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை இராண்டாம் ஆண்டு மாணவர். இந்த 50 ஆண்டுகளில் அவர் 38 நூல்களும் 7500 பாடல்களும் எழுதியிருக்கிறார்.
கவிஞர் வைரமுத்துவின் இலக்கியப் பொன்விழா இந்த ஆண்டு முழுவதும் பல ஊர்களிலும் பல நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று கோயமுத்தூரில் கவிப்பேரரசு வைரமுத்துக்கு விழா எடுக்கப்பட்டது, இவ்விழாவில் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டவர்கள் வைரமுத்துவின் தமிழ் சேவையை சுட்டிக்காட்டி பாராட்டி வாழ்த்தி பேசினார்கள். அதன் பிறகு ஏற்புரை நிகழ்த்திய கவிப்பேரரசு வைரமுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு ,12ஆம் வகுப்பு மாணவர்கள் தமிழில் அதிகமானவர்கள் தோல்வியுற்று இருப்பது மிகவும் வேதனைக்குரியது. அது மட்டுமல்லாமல் தற்போது தமிழ் மாணவர்களுக்கு தமிழில் பேசுவதற்கும், தமிழில் எழுதுவதற்கும், தமிழை கையாளுவதற்கும் மிகவும் சிரமப்படுகிறார்கள் தமிழ்நாட்டில் தமிழ் மாணவர்கள் இதுபோல நிலையில் இருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது ,இதே நிலை நீடித்தால் இன்னும் 50 ஆண்டுகளில் தமிழ் மொழி வெறும் பேச்சு மொழியாக மட்டுமே இருக்கும், இதை தடுப்பதற்கு மாணவர்களும், மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய ஆசிரியர்களும், இணைந்து தாய்மொழி தமிழை கற்று, கற்பித்து காப்பாற்ற வேண்டும் என்றார். மேலும் மொழி என்பது வெறும் கருவியல்ல என்பதை அனைவரும் உணர்ந்து ரசித்து, ருசித்து, நேசித்து, காக்க வேண்டும் என்றார் கவிப்பேரரசு வைரமுத்து.
இவரின் 28வது வயதில் இதுவரை நான் என்ற சுயசரிதை எழுதியவர் கவிப்பேரரசு வைரமுத்துவின் மிகவும் புகழ்பெற்ற படைப்புகள் பல.கருவாச்சி காவியம் வைரமுத்து கவிதைகள் மூன்றாம் உலகப் போர் , தண்ணீர் தேசம் ,கொஞ்சம் தேநீர் நிறைய வானம், திருத்தி எழுதிய தீர்ப்புகள் வைரமுத்து சிறுகதைகள் –பெய்யெனப் பெய்யும் மழை என்று வைரமுத்துவின் படைப்புலகம் விரிந்துகொண்டே வந்திருக்கிறது. அண்மையில் வெளியிடப்பட்ட தமிழாற்றுப்படை நூல் மூன்றே மாதங்களின் பத்துப்பதிப்புகள் கண்டு தமிழ்ப் பதிப்புலகில் சாதனை படைத்திருக்கிறது.
திரைப்படப் பாடலாசிரியருக்கென்று 7 முறை தேசிய விருது பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் இவர் தான்.சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாடு அரசு விருதினை 6 முறை வென்றவரும் இவர் மட்டும்தான்.
2003 ஆம் ஆண்டு சாகித்யஅகாடமி விருது பெற்ற இவரது கள்ளிக்காட்டு இதிகாசம் 23 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. அண்மையில் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியான கள்ளிக்காட்டு இதிகாசம் நாட்டின் சிறந்த புத்தகத்துக்கான ‘ஃபிக்கி’ விருதுக்குத் தேர்வு பெற்றது.
இலக்கியத்தின் பங்களிப்பிற்காக இந்தியாவின் உயர்ந்த விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதும், பாரதிய பாஷா பரிஷித் அமைப்பின் சாதனாசம்மான் விருதும் பெற்றிருக்கிறார்.
தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களிலும் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.
அந்நாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் இவரைக் கவிசாம்ராட் என்று அழைத்தார். அந்நாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் காப்பியக் கவிஞர் எனறு குறித்தார். அந்நாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இவருக்குக் கவிப்பேரரசு என்று பட்டம் அளித்தார்.
இவரின் படைப்புகள் ஆங்கிலம் , இந்தி ,தெலுங்கு ,கன்னடம் , மலையாளம் ,உருது ,வங்காளம் , ரஷ்யன் , நார்வேஜியன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறான பெரும் புகழுக்கு உடையவர் கவிப்பேரரசு வைரமுத்து இவர் நம்மவர் தமிழ்நாட்டில் பிறந்தவர் ,தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.அதே நேரத்தில் நேற்று கோயமுத்தூரில் பேசிய வைரமுத்து இதே நிலை நீடித்தால் இன்னும் 50 ஆண்டுகளில் தமிழ் வெறும் பேச்சு மொழியாக மட்டுமே இருக்கும் என்கிற எச்சரிக்கையையும் மனதில் ஏந்தி தமிழை கற்றுக் காப்பாற்ற அனைவரும் உறுதி ஏற்போம்.