மாநாடு 06 May 2025
தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் மணியரசன் தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆட்சியாளர்கள் தங்களது மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும், மாநில சுயாட்சி வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி வருகின்றனர். நமது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுப்ரீம் கோர்ட்டு மேனாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில், மாநிலங்களுக்கு கூடுதலாக கிடைக்க வேண்டிய அதிகாரங்கள் குறித்த பரிந்துரைகள் வழங்குவதற்கான வல்லுநர் குழு அமைத்துள்ளார்.
இந்திய அரசமைப்பு சட்டம் 1950-ல் செயல்பாட்டுக்கு வந்தபின் 1951 முதல் இதுவரை சுமார் 106 முறை திருத்தப்பட்டுள்ளது. இத்திருத்தங்கள் மேலும் மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கானவை அல்ல. ஆங்கிலேய ஆட்சியில் மாநில அரசுகளிடம் இருந்த அதிகாரங்களை பறிப்பதற்கானவை.
ஆங்கிலேயர் ஆட்சியில் 1937-ம் ஆண்டு முதல் மாநில அரசிடம் இருந்துவந்த விற்பனைவரி உரிமையை நீக்கி, அதனை இந்திய அரசின் சரக்கு சேவை வரிக்குள் (ஜி.எஸ்.டி) சேர்த்துவிட்டனர். இதேபோல், மாநில அரசிடம் இருந்த கல்வி உரிமையை பறித்து பள்ளி கல்வி முதல் பல்கலைக்கழக கல்வி வரை இந்திய அரசிடம் சேரத்துவிட்டனர். இதனை வைத்துக் கொண்டு பா.ஜ.க.வினர் இந்தி திணிப்பை கல்வித்துறையில் தீவிரப்படுத்திகின்றனர்.
இதேபோல், அரசமைப்பு சட்டத்தில் இருந்து ஆளுநர் பதவிக்கான உறுப்புகள் 153 தொடங்கி அப்பதவி சார்ந்த பிரிவுகள் அனைத்தையும் நீக்கவேண்டும். அமெரிக்க ஐக்கிய நாடுகள், சுவிட்சர்லாந்து போன்ற கூட்டாட்சி நாடுகளில் உள்ள மாநில ஆட்சிகள் போல் இந்தியாவிலும் மாற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை விவாதிக்கவும், தமிழர்களின் தொன்மை, வளமை முதலியவை குறித்த ஆய்வரங்கங்கள் நடத்தவும், “கூட்டரசுக் கோட்பாடு சிறப்பு மாநாடு” வருகிற 10-ந்தேதி தஞ்சை காவேரி திருமண மண்டபத்தில் காலை 9 முதல் மாலை 7.30 மணி வரை நடைபெற உள்ளது. மாநாட்டில் பாவரங்கம், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடக்கின்றன.
மாநாட்டின் நிறைவரங்கத்தில் நானும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்த் சேதியப் பேரியக்க பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். இந்த மாநாட்டில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது நிர்வாகிகள் பழ.ராஜேந்திரன், தென்னவன், ராசு முனியாண்டி, ராமசாமி, தீன் தமிழன் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தி – N.செந்தில்குமார்.