ஸ்டாலின் கனவை திமுகவினரே கலைக்கலாமா
ஒரு நாடு சுத்தமாக இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு ஊரும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஒரு ஊரு சுத்தமாக இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு தெருவையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஒரு தெரு சுத்தமாக இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு வீடும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் அல்லவா வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய வீட்டின் உறுப்பினர்களே அந்த வீட்டை அசுத்தப்படுவதும் , அதை தடுத்து நிறுத்தி கண்டிக்க வேண்டியவர்களே பார்த்து ரசிப்பது போல இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி தான் இந்த செயல் இருக்கிறது என்று அந்த வழியாக சென்ற ஒரு பெரியவர் சொன்னார். வீட்டை நாம் பார்த்து வைத்திருப்பது போல நாட்டை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தான் ஒவ்வொரு துறைக்கும் அதிகாரிகளை நியமித்து அவர்களுக்கும் வேலை பழுவை குறைப்பதற்காக அடுத்த நிலையில் அதிகாரிகளை உதவியாளர்களை நியமனம் செய்து நிர்வாகம் செய்கிறோம். இதுவே அரசு நிர்வாகம் எனப்படுகிறது. அப்படியான அரசு அதிகாரிகள் சரியாக வேலைகள் செய்ய வேண்டும் என்பதை கண்காணித்து மக்களுக்கு சேவை செய்ய தான் அரசியல் கட்சிகள் தொடங்குகிறார்கள். மக்களுக்கு சேவை செய்வதாக கூறி தான் கட்சியின் தலைவர்கள் முதல் அக்கட்சியின் தொண்டர்கள் வரை பொது வாழ்க்கைக்கு வருகிறார்கள். அப்படி இருக்க மக்களின் பணத்தை கொண்டு தானே இதை சுத்தம் செய்கிறோம் இதை அசுத்தப்படுத்தக்கூடாது என்ற புரிதலே இல்லாமல் தஞ்சையில் முதல்வர்கள் முதல் அமைச்சர்கள் வரை தங்கும் அரசினர் சுற்றுலா மாளிகை சுற்று சுவரில் எதாவது ஒரு வாழ்த்துக்கள் போஸ்டர் ஒட்டி வைத்திருக்கிறார்கள்.
இப்போது திமுக ஆட்சியில் இருப்பதால் அவர்களின் துதி பாடல் போஸ்டர்கள் அதிகமாக இருக்கிறது. அருகிலேயே தான் திமுகவின் அலுவலகமான கலைஞர் அறிவாலையம் இருக்கிறது அங்கு மாவட்ட செயலாளர்கள் மந்திரிகள் போன்ற உயர்ந்த பொறுப்பில் இருந்து மக்களுக்கு அடிமட்ட வேலைகளை செய்ய வேண்டியவர்கள் வரும் போது ஒரு முறை கூடவா இது கண்ணில் படாமல் இருந்திருக்கும்? இவர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டாமா?
இவர்கள் இப்படி இருந்தால் அதிகாரிகளை எப்படி கேள்வி கேட்க முடியும். திமுகவின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் நாம் எல்லாருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று சொல்லி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தானே. அவர் அப்படி இருக்க ஆளும் அரசின் தொண்டர்களே அரசின் சொத்தை இப்படி சேதப்படுத்தி தங்கள் தலைவரின் கனவை கலைக்கலாமா? அருகில் இருக்கும் கலைஞர் அறிவாலயத்தை சுத்தமாக வைத்திருக்க தெரிந்த திமுகவினருக்கு இந்த விருந்தினர் மாளிகையை சுத்தமாக வைத்திருக்க முடியாதா அது அவர்களின் சொத்துங்க இது அரசாங்க சொத்துங்க இப்ப அரசே அவர்களது தான் என்று உணர்வார்களா இவர்கள் என்று சொல்லி நகர்ந்தார் அந்த பெரியவர். அதுவும் சரிதானே இனி இப்படி எங்குமே நடக்காமல் சுத்தமாக வைத்திருக்க கட்டளையிடுவாரா முதல்வர் ஸ்டாலின் !