மாநாடு 17 June 2022
அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி கோவை மாவட்டத்தில் உள்ள விளாங்குறிச்சியில் உள்ள தனது இல்லத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அதிமுகவின் தொண்டனாக கருத்து கூறுகிறேன். ஆட்சியில் இருக்கும் போது உள்ளாட்சித் தேர்தலை நடத்தும்படி பலமுறை வலியுறுத்தினோம், ஆனால் வழக்கு இருப்பதாக காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருந்தார்கள் அதன் காரணமாக தான் அதிமுக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் உள்ளாட்சித் தேர்தலிலும் படுதோல்வி அடைந்தது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தியிருந்தால் அதிமுக ஆட்சியை இழந்திருக்காது.
இப்போதும் இருவரும் தனித்தனியாக பேட்டி கொடுத்து வருகின்றனர். இருவருமே விபத்தில் பதவிக்கு வந்தவர்கள் . இரண்டு பேரும் ஆளுக்கு கொஞ்சம் பெயரை வைத்துக்கொண்டு இவ்வாறாக தனித்தனியாக பேட்டி கொடுத்துக் கொண்டு குழு சண்டை போட்டுக் கொண்டிருப்பது அதிமுகவிற்கு நல்லதல்ல.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஓபிஎஸ் ,இபிஎஸ் இருக்கும் சொந்த வார்டில் கூட வெல்ல முடியாமல் போய்விட்டது. கோயமுத்தூரில் வேலுமணி வார்டில் 2000 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வென்று இருக்கிறது.
ஜெயலலிதா வழி நடத்திய அதிமுக கட்சி இப்போது இல்லை, தற்போது ஓபிஎஸ் ,இபிஎஸ் நடவடிக்கையால் அதிமுக சாதிக் கட்சியாக மாறி விடும் என்கிற கவலை அதிமுக தொண்டர்களுக்கு வர ஆரம்பித்துவிட்டது, அதிமுக இயக்கம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம், அன்வர் ராஜாவை ஏன் கட்சியை விட்டு நீக்கினார்கள் கட்சிக்காக பேசினார் ,கட்சியை விட்டு நீக்கினார்கள் ,பேட்டி கொடுப்பதால் என்னையும் நீக்கினாலும் நீக்குங்கள் என்றார் ஆறுகுட்டி.
இவர்கள் இருவருக்குமே அதிமுகவில் செல்வாக்கு இல்லை ,வேறு யாராவது புது தலைமை வரட்டும். இனி இவர்கள் இருவரும் இணைந்து இயங்க வாய்ப்பில்லை ,அதிமுக பல சோதனைகளை கடந்து வளர்ந்த கட்சி தயவுசெய்து அதிமுகவை சாதிக் கட்சியாக மாற்றி விடாதீர்கள் என கேட்டுக்கொண்டார். அதிமுகவில் கோஷ்டிகள் இருந்ததில்லை, இவர்கள் இருவரும் சுத்தமானவர்கள் இல்லை என்றும் தெரிவித்தார்.
எனக்கு சட்டமன்றத்தில் சீட்டு இல்லை என்றனர் .என்னோடு வேலுமணி பேசுவதில்லை, நான் ஒதுங்கி விட்டேன் என்றவர் அதற்காக நான் சசிகலா வரட்டும் என்று கூறவில்லை யாரையாவது ஒற்றை தலைமையை தேர்ந்தெடுங்கள் இவர்கள் இருவரும் வேண்டாம் என்று தெரிவித்தார்.