மாநாடு 19 September 2026
தற்போது தஞ்சாவூர் குப்பை கிடங்கில் குப்பைகளை கொட்ட முடியாமல் வரிசை கட்டி நிற்கிறது வாகனங்கள் அலட்சியமே காரணமா? விபரம் பின்வருமாறு:
தஞ்சாவூரில் பல இடங்களில் முறையாக குப்பை தொட்டிகள் வைக்காத காரணத்தாலும், அப்படியே வைத்திருந்தாலும் அதை சரியாக முறையாக பராமரித்து குப்பைகளை சரியான நேரத்தில் அப்புறப்படுத்தாத காரணத்தாலும் குப்பைகள் தேங்கி கிடந்து நோய் பரவும் அபாயம் இருப்பதை அனைவரும் அறிவர். இதற்கெல்லாம் மூல காரணம் சில அலுவலர்களின் அலட்சியமே என்று கூறப்படுகிறது. அது எப்படி என்று நாம் கேட்கும் போது நிரந்தர குப்பை அகற்றும் தூய்மை பணியாளர்கள் வேலைக்கு வராமல் கையெழுத்து போட்டுவிட்டு வேலை செய்யாமல் சென்று விடலாமாம் அதற்காக அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒவ்வொரு மாதமும் அவர்கள் வாங்கும் சம்பளத்திலிருந்து ஒரு தொகையை அலுவலர்களுக்கு கொடுக்க வேண்டுமாம் இது எழுதப்படாத சட்டமாக பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறதாம் . இதனால் அவர்கள் செய்ய வேண்டிய அந்த வேலைகளையும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தான் செய்யவேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கிறார்களாம் அதனால் தான் குப்பைகள் சில நேரங்களில் பல இடங்களில் அப்படியே தேங்கி விடுகிறது என்றவர்கள் தங்களது பெயரை குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கண்டு தொடர்ந்தார்கள் எழில் மிகு நகரத் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட பல பேட்டரி வண்டிகள் பழுது பார்க்காமல் காலாவதியாகி ஓட முடியாத நிலையில் கிடக்கிறது என்றும் குப்பை அள்ள தஞ்சாவூர் மாநகராட்சியில் ஒப்பந்தம் போட்டுள்ள தனியார் நிறுவனம் , சில அலுவலர்களை கையில் வைத்துக் கொண்டு உழைக்கும் தொழிலாளிகளை வஞ்சிக்கும் வேலையை தொடர்ந்து செய்து கொண்டு வருவதாகவும் அதற்கு யாரேனும் குரல் கொடுத்தால் அவர்களின் குரல் வளையை நெரிக்கும் படியான நெருக்கடிகளை தருவதாகவும் கூறுகிறார்கள். இந்நிலையில் தற்போது குப்பை அள்ளும் வாகனங்கள் குப்பைகளோடு தஞ்சாவூர் குப்பை கிடங்கு பகுதியில் அணிவகுத்து நிற்கிறது,
இதற்கான காரணமாக தெரிய வருவது யாதெனில் தஞ்சாவூரில் பல பகுதிகளில் இருந்து அள்ளி எடுத்துச் செல்லும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு அந்த குப்பைகளை தள்ளி அகற்றுவதற்கு சரி செய்வதற்காக உள்ள ஹிட்டாச்சி வாகனம் பல நாட்களாக பிரச்சனைகள் கொடுத்து வந்துள்ள நிலையில் இன்று முழுவதுமாக செயலிழந்து நின்று விட்டதாம் இப்படி ஆகும் என்று ஏற்கனவே மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்த போதும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் குப்பையை அகற்ற முடியாத நிலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதாக கூறப்படுகிறது.
இதனைப் பற்றி இந்தப் பகுதியில் சுகாதார ஆய்வாளர் பொன்னர் கூறியதாவது : சார் இதனை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று விட்டோம் அவர்களும் கொட்டேஷன் போட்டு வட்டார்கள் இந்நிலையில் இன்று பழுதாகி நின்றுவிட்டது உடனே நான் நேரடியாக அந்த இடத்திற்கு வந்து விட்டேன் வேறு வாகனம் வெளியில் இருந்து வாடகைக்கு எடுத்து வரச் சொல்லி இருக்கிறேன் எந்தவிதத்திலும் பணிகள் தொய்வில்லாமல் நடக்க வழி செய்து விடுவோம் சார் என்றார். வெளியில் இருந்து வாடகைக்கு எடுத்து வரும் வாகனத்திற்கு வாடகை எந்த பணத்தில்? யார் பணத்தில் இருந்து தருவீர்கள் என்ற நமது கேள்விக்கு இனி தான் சார் அதை பற்றி முடிவெடுப்போம் என்றார் சுகாதார ஆய்வாளர் பொன்னர். எப்படியோ பிரச்சனைகள் என்றவுடன் அந்த பகுதிக்கு உடனடியாக சென்று அதை தீர்க்க முற்படும் சுகாதார ஆய்வாளர் பொன்னர் , இனி இதுபோல நடக்காமல் இருக்க இதற்கான ஒப்பந்தத்தை எடுத்திருக்கும் தனியார் நிறுவனத்தை வலியுறுத்தி கேட்டு சீர் செய்ய வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், மழை நேரம் வந்து விட்டதால் மக்களை நோயிலிருந்து காக்கக்கூடிய பெரும் கடமையும் தங்களுக்கு இருப்பதை சுகாதாரத்துறை, சுகாதார அலுவலர்கள், உணர்ந்து செயல்பட வேண்டும், சட்டமன்ற தேர்தலின் போது பலரும் இங்குள்ள குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றுவதாக கொடுத்த வாக்குறுதி, இங்கு கிடக்கும் குப்பைகளோடு குப்பையாக கிடப்பதை மக்கள் ரசிக்கவில்லை என்பதையும், மக்களுக்காக உழைக்க வந்ததாக கூறி வருபவர்களும் உணர்ந்து நடக்க வேண்டும் என்பதே பலரின் சுட்டிக்காட்டு அறிவுரைகளாக இருக்கிறது….