மாநாடு 06 May 2025
சென்னை மாநகராட்சி மேயராக மா. சுப்பிரமணியன் இருந்தபோது வேறொருவருக்கு ஒதுக்கப்பட்ட சிட்கோ நிலத்தை போலி ஆவணங்களை பயன்படுத்தி தனக்கு இருக்கும் அதிகாரத்தை வைத்து தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றி உள்ளதாக தொடுக்கப்பட்ட வழக்கின் இன்று வந்தபோது சிறப்பு நீதிமன்றம் மா. சுப்பிரமணியனுக்கு கடும் எச்சரிக்கை கொடுத்துள்ளது அதன் விவரம் பின்வருமாறு;
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சிட்கோ நிலத்தை தற்போது அமைச்சராக உள்ள மா.சுப்பிரமணியன் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலமாக தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றியுள்ளதாக பார்த்திபன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்ததையொட்டி பல்வேறு பிரிவுகளின் கீழ்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் மீதும் சிபிசிஐடி காவலர்கள் வழக்குப் பதிவு செய்தார்கள். இந்த வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு காவல் துறை தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு நடந்து வருகிறது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரது மனைவி காஞ்சனா இருவரும் நேரில் ஆஜராகவில்லை. அமைச்சரவைக் கூட்டம் நடப்பதால் விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரி மா.சுப்பிரமணியன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதையேற்ற நீதிபதி ஜெயவேல் இந்த வழக்கின் குற்றச்சாட்டுப் பதிவுக்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரது மனைவி காஞ்சனா ஆகிய இருவரும் மே மாதம் 6ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்றும் நேரில் ஆஜராகாததால் மே மாதம் 23 ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்த நீதிபதி மே மாதம் 23 அன்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் ஆஜராகவில்லை என்றால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.