மாநாடு 25 August 2025
இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு கீழ்கண்டவாறு புகழ் வணக்க அறிக்கை வெளியிட்டுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
தனது கம்பீரமான நடிப்பாற்றலால் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி, மக்களை மகிழ்வித்த ஆகச்சிறந்தத் திரைக்கலைஞர்!
இயக்குநராகவும், நடிகராகவும் பலருக்கு அறிமுக வாய்ப்புகளைக் கொடுத்து, தன்னோடு மற்றவர்களும் மேலேறி வர வேண்டுமெனும் நல்நோக்கத்தோடு கைதூக்கிவிட்ட குணாளர்!
தான் சார்ந்திருக்கிற நடிகர் சங்கம் பெருங்கடனில் மூழ்கித் தவித்தபோது தனது கடினமான உழைப்பாலும், நிர்வாகத்திறனாலும் மீட்டெடுத்த பெருந்தகை!
ஏழை எளிய மக்கள் எவரும் பசி, பட்டினியாக இருக்கக்கூடாதெனும் உயர்ந்த எண்ணம் கொண்டு, தன்னைநாடி வந்தவர்களுக்கெல்லாம் உணவிட்ட மனிதநேயவாதி!
எந்த நிலையிலும் தன்னிலை மாறாது உள்ளன்போடு எல்லோரிடமும் சரிசமமாக பழகிய பண்பாளர்!
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஐயா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவரது நற்செயல்பாடுகளைப் போற்றி, என்னுடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.