மாநாடு 23 June 2022
கடந்த 8 நாட்களாக அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையாகி இருந்தது ,அதன் காரணமாக இபிஎஸ் தரப்பு ஓபிஎஸ் தரப்பு என்று இரு குழுவினர்களாக பிரிந்து நின்றார்கள். இபிஎஸ் தரப்பு ஒற்றை தலைமை அதிமுகவிற்கு வேண்டுமென்றும் ,ஓபிஎஸ் தரப்பினர் இரட்டை தலைமையே அதிமுகவில் நீட்டிக்க வேண்டும் என்றும் கூறிவந்தனர்.
இதனிடையே இன்று 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெறவிருந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வந்தது ,அதன் ஒரு பகுதியாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் எனவே பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என்று காவல்துறை ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது, அந்த மனு நேற்று நிராகரிக்கப்பட்டது
பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பொதுக்குழுவிற்க்கு தடை கேட்டு வழக்கு தொடுத்திருந்தார், அதுவும் நேற்று இரவு 8.30 மணி அளவில் தள்ளுபடி செய்யப்பட்டது.
உயர் நீதிமன்றத்திலும் பொதுக்குழு நடைபெறுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு ஓபிஎஸ் தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் பொதுக்குழுவை நடத்தலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நேற்று இரு நபர் கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள், இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு நேற்று இரவு 1 மணி அளவில் விசாரணை தொடங்கியது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொதுக்குழு நடப்பதற்கு அனுமதி வழங்கினார்கள், 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்றிக் கொள்ளலாம் வேறு புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட கூடாது என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை 10.15 மணி அளவில் கூட்ட அரங்கிற்கு ஓபிஎஸ் வந்து சேர்ந்தார். ஈபிஎஸ் வந்தார். சற்று நேரத்திலேயே ஓபிஎஸ் துரோகி வெளியேறு என்று கூடியிருந்தவர்கள் முழக்கங்கள் எழுப்பினார்கள், கூடவே ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சரும், இணை ஒருங்கிணைப்பாளருமான ஆர். வைத்தியலிங்கம், ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோர்களையும் நோக்கி எதிர்ப்பு முழக்கங்களை தொண்டர்கள் எழுப்பினார்கள், இதன் காரணமாக மேடையிலிருந்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் மேடையை விட்டு கீழே இறங்கினார்.
பொதுக்குழுவில் பேசிய அனைவரும் ஒற்றைத் தலைமையை ஆதரித்து வலியுறுத்தி பேசினார்கள், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் 23 தீர்மானங்களும் பொதுக்குழு நிர்வாகிகளால் நிராகரிக்கப்பட்டது என்று அறிவித்தார்.
23 தீர்மானங்களும் அடுத்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் என்றும் அந்த பொதுக்குழுவில் தொண்டர்களின் பெரும்பான்மையானவர்களின் விருப்பமும் தீர்மானமுமான ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமைக்கு ஆதரவாக எழுதிய கடிதத்தை முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வாசித்தார்.
தற்காலிக அவைத் தலைவராக இருந்த தமிழ்மகன் உசேன் நிரந்தர அவைத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
பொதுக்குழு கூட்டம் சட்டவிரோதமாக நடைபெறுகிறது என்று கூறி ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறினார்,
அடுத்த பொதுக்குழு கூட்டம் வருகிற ஜூலை மாதம் 11ம் தேதி என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த கூட்டத்தில் இருபத்திமூன்று தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் அதோடு ஒற்றைத் தலைமையையும் அறிவிக்கப்படும் என்று தெரிய வருகிறது.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.