மாநாடு 6 July 2022
மக்களிடத்தில் வாங்கும் திறன் குறைந்து பொருட்களின் விலை அதிகரித்தால் அந்த இடத்தில் பஞ்சம் நிலவும் சமூகத்தில் குற்றச் செயல்கள் அதிகரிக்கும் இதை சரிப்படுத்தி சமன் படுத்தி அனைவரும் வாழும்படி மக்களுக்கு வேலை செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும்,
சமீப காலமாக சிறு குறு தொழில்கள் மிகவும் நலிவடைந்து உள்ளது. இதனால் சிறு கடை நடத்திக் கொண்டிருக்கின்ற வியாபாரிகள் மிகவும் அல்லல் படுகிறார்கள். தற்போது அனைத்தையும் ஆன்லைன் மூலம் வாங்கும் வசதிகளும் வந்துவிட்டது.அது மட்டுமல்லாமல் குழந்தைகள் பயன்படுத்தும் பேனா ,பேப்பர் ,ரப்பர், முதல் நாப்கின் வரை பெரும்பாலான பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை விதித்து அவ்வப்போது உயர்த்தியும் வருகிறது ஒன்றிய அரசு.
அரசுகளின் தவறான கொள்கை முடிவுகளால் சிக்கித் தவிப்பது என்னவோ ஏழை, எளிய நடுத்தர மக்கள் தான் அதன்படி கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எரிபொருட்கள், சமையல் எரிவாயு உள்ளிட்ட விலைகளை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்ததன் விளைவும், தற்போது ஆளும் பாஜக அரசின் இதனை கண்டுகொள்ளா தன்மையும் உலகின் கச்சா எண்ணெய் விலைகளை காரணம் காட்டி அவ்வப்போது அத்தியாவசிய பொருளான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்திக் கொண்டே வருகிறது எண்ணெய் நிறுவனங்கள்.
அதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி 710 ரூபாய் விற்ற சிலிண்டரின் விலை இன்று 50 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு 1068 ரூபாய் என வீட்டு சிலிண்டரின் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது இந்த விலை ஏற்றம் சாமானியர்களை கடுமையாக பாதித்துள்ளது இதனால் குடும்பத் தலைவிகள் மிகவும் அதிருப்தியில் இருக்கிறார்கள். 710 சிலிண்டர் விலை இருந்தபோது தங்களது வங்கி கணக்கில் ஏறக்குறைய 300 ரூபாய் மானியமாக கொடுக்கப்பட்டதாகவும் விலை ஏற்றப்பட்டபோது மானியங்கள் குறைக்கப்பட்டு வங்கி கணக்கில் 24 ரூபாய் தான் ஏற்றப்படுகிறது என்று கூறுகிறார்கள்.
2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் இன்று வரை கடந்த 19 மாதங்களில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ஏற்றத்தை சற்று பார்ப்போம்: 2021 ஜூன் 1ஆம் தேதி 710 ரூபாய், பிப்ரவரி 25ஆம் தேதி 810 ரூபாய், மார்ச் மாதம் 1ம் தேதி 835 ரூபாய் , ஏப்ரல் 1ஆம் தேதி 825 ரூபாய், ஜூலை 1ஆம் தேதி 850 ரூபாய், ஆகஸ்ட் 17ஆம் தேதி 875 ரூபாய், செப்டம்பர் 1ஆம் தேதி 900 ரூபாய், அக்டோபர் 6ம் தேதி 915 ரூபாய், அதன் பிறகு நவம்பர், டிசம்பர் 2022 ஜனவரி, பிப்ரவரி ஆகிய நான்கு மாதங்கள் விலை மாற்றம் இல்லாமல் இருந்தது.
2022 மார்ச் மாதம் 965 ரூபாய் 50 பைசா, மே மாதம் 1018 ரூபாய் 50 பைசாவாக இருந்த வீட்டு உபயோக சிலிண்டரின் விலை இன்று 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1068 ரூபாய் 50 பைசா என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது .