நமது செல்போன் மூலம் கொரோனா பரிசோதனையை நாமே செய்யலாம்
ஒரு காலத்தில் பேசுவதற்கு மட்டும் பயன்பட்டு வந்த செல்ஃபோன்கள் எப்போது ஸ்மார்ட்ஃபோனாக வர ஆரம்பித்ததோ அப்போதிலிருந்து இதனைக் கொண்டு வீடியோ பிடிப்பதில் தொடங்கி பாதை தெரியாத ஊர்களுக்கு கூட இணையத்தின் உதவியோடு வழிக்காட்டி மூலம் பயணம் செய்வது ஆன்லைனில் வகுப்புகள் பயில்வது என பலவிதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அத்தியாவசிய சாதனமாக மாறிவிட்ட செல்ஃபோன்கள் தற்போது மற்றொரு முக்கியமான விஷயத்துக்கு பயன்படவுள்ளது.
அதாவது இன்று ஒட்டுமொத்த உலகையே மிரட்டி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ள செல்ஃபோன்கள் விரைவில் பயன்பட உள்ளது.
இதற்கான வழிமுறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஹார்மனி கொரோனா பரிசோதனை முறை என்று அழைக்கப்படும் இந்த முறையில் சார்ஸ் கோவ்-2 வைரசின் மரபணுப்பொருள் கண்டறியப்படுகிறது.இந்த சோதனையானது நாசி ஸ்வாப் மாதிரியில் சார்ஸ் கோவ்- ஆர்என்ஏ மரபணு இருப்பதை கண்டறியும் ஆர்டிபிசிஆர் போன்ற முறையை ஒத்தது.
குறைந்த கட்டணத்தில், உயர் செயல்திறன் கொண்ட இந்த சோதனை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் செயல்படுத்தக்கூடியதாக இருக்கும்.அணுகக்கூடியதாக இருக்கும். இதில் டிடெக்டரை இயக்கவும், முடிவை தெரிந்து கொள்ளவும் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தப்படுகிறது.
இதில் பயன்படுத்தக்கூடிய டிடெக்டர் ஒரே நேரத்தில் 4 நபர்களின் மாதிரிகளை சோதிக்கிற திறன் கொண்டது.அத்துடன் இந்த ஹார்மனி கொரோனா பரிசோதனை முறையில், வைரஸ் மரபணுவின் 3 வெவ்வேறு பரிமாணங்களை கண்டறிய முடியும். இந்த பரிசோதனை முறையை வீட்டு உபயோகத்துக்கு ஏற்ற விதத்தில் மாற்றியமைக்கும் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன என்று வாஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பரிசோதனை முறை நடைமுறைக்கு வந்தால் தற்போது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அவர்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதற்கான சாதனத்தை கொண்டு வீட்டில் இருந்தபடியே கண்டறிவது போல ஒருவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா ?இல்லையா ?என்பதையும் வீட்டில் இருந்தபடியே கண்டுபிடித்து விடலாம்.
இதனால் தற்போது ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவதற்கு செய்யப்படும் 1000 ரூபாய் வரையிலான செலவும் மிச்சப்படும் என விஞ்ஞானிகள் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றார்கள்