மாநாடு 25 June 2022
டேட்டிங் ஆப் மூலம் பழக்கமான பெண்ணிடம் கொண்ட மோகத்தால் 5.70 கோடி பணத்தை இழந்த உயர் அதிகாரி அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பெங்களூர் அனுமந்த் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியின் மேலளாராக பணிபுரிந்தவர் ஹரிசங்கர். இவர் ஜெயநகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பணிபுரியும் இந்தியன் வங்கியின் வாடிக்கையாளரான அனிதா என்பவர் தனது கணக்கில் ரூ.1.3 கோடியை டெபாசிட் செய்திருக்கிறார். இந்த டெபாசிட் தொகையை வைத்து அவர் ரூ.75 லட்சம் கடனாகவும் பெற்றுள்ளார். இந்த கடனுக்காக அனிதா பல்வேறு ஆவணங்களையும் வங்கியில் ஒப்படைத்துள்ளார்.
இந்த நிலையில் அனிதாவின் ஆவணங்களை போலியாக பயன்படுத்தி பல கட்ட தவணைகளாக ரூ.5.70 கோடி கடனாக பெறப்பட்டுள்ளது என்கிற விவரம் அனிதாவுக்கு தெரியவரவே அவர் வங்கியின் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், வங்கி அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளார்கள்.
இந்த விசாரணையில் திடுக்கிடும் பல மோசடி சம்பவங்கள் வெளிவந்தது. மே மாதம் 13ம் தேதியில் இருந்து 19ம் தேதி வரை அனிதாவின் டெபாசிட் தொகை மூலமாக அவரது பெயரில் ரூ.5.70 கோடிக்கு கடன் பெற்றிருப்பதும், அந்த பணம் பெங்களூருவில் உள்ள வங்கியில் இருந்து கர்நாடகத்தில் உள்ள 2 வங்கிகளுக்கும், மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள 28 வங்கி கணக்குகளுக்கும் மாற்றப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த பணப்பரிமாற்றம் நிகழ்ந்து சில நாட்களில் அதே வங்கி கணக்குக்கு, வங்கி மேலாளர் ஹரி பாஸ்கரின் வங்கி கணக்கில் இருந்தும் ரூ.12.5 லட்சம் மாற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் தான் இந்த கையாடலில் அந்த வங்கியின் மேலாளர் ஹரிசங்கர் தான் ஈடுபட்டார் என்பது உறுதியானது.
இதையடுத்து வங்கி உயர் அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில், வங்கி மேலளார் ஹரிசங்கரை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியானது. அதாவது, ஹரிசங்கர், ‘டேட்டிங்’செயலி மூலமாக இளம்பெண் ஒருவருடன் பழகி வந்ததாகவும், இதனை பயன்படுத்தி அந்த பெண் தன்னிடம் இருந்து ரூ.5.70 கோடி பணத்தை மோசடி செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இளம்பெண் மீதான மோகத்தால் அவர் கூறிய வங்கி கணக்குகளுக்கு ரூ.5.70 கோடியை ஹரிசங்கர் பணம் போட்டதாக கூறுவதை போலீசார் நம்பவில்லை. வங்கி மேலாளராக இருந்துக்கொண்டு, சைபர் மோசடி குறித்து அவர் நன்கு அறிந்திருக்க வேண்டும், அப்படி இருக்கும்போது, நேரில் கூட பார்க்காத ஒருவருக்கு அவர் இவ்வளவு பெரும் தொகையை கையாடல் செய்து வழங்கியிருக்க வாய்ப்பில்லை என காவலர்கள் சந்தேகிக்கின்றனர். இதனை தொடர்ந்து ஹரி சங்கரிடம் இருந்து அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.
இளம்பெண் மீது ஹரிசங்கர் குற்றச்சாட்டு கூறி இருப்பதால், இளம்பெண்ணுக்கு பின்னணியில் பெரிய கும்பல் எதுவும் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.. இந்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.