மாநாடு 12 June 2022
கடந்த வியாழக்கிழமை 9ம் தேதி மாலை 7 மணி அளவில் தஞ்சாவூர் பகுதி மிகுந்த பரபரப்பாக இருந்தது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிகர்களும் கொந்தளிப்பான மனநிலையில் இருந்தார்கள்.
காரணம் தஞ்சாவூரில் முக்கிய பகுதியான கருந்தட்டாங்குடியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்த நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கருந்தட்டாங்குடி பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன்,தினேஷ்குமார் என்கிற 2 இளைஞர்களும் போதையில் அரிவாளை எடுத்துக்காட்டி அங்கிருந்த கடைகளில் அடாவடியாக பணம் பறித்திருக்கிறார்கள்,மருந்து கடையில் பணத்தை எடுத்திருக்கிறார்கள் ,அதனைத் தொடர்ந்து ஆறு கடைகளில் இதேபோல மிரட்டியும், ஒரு கடையில் கல்லாப்பெட்டியை திறந்தும் அவர்களே கையைவிட்டு பணத்தை எடுத்து இருக்கிறார்கள். 78 வயது உடைய செந்தில்வேல் என்பவரின் மளிகை கடையிலும் சென்று மிரட்டி பணத்தை கேட்டிருக்கிறார்கள் ,அவர் கொடுக்க மறுத்திருக்கிறார் ,உடனே அரிவாளால் அவரை தலையில் வெட்டி இருக்கிறார்கள்.
இதில் பலத்த காயமடைந்தவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக அந்த பகுதியில் வணிகர் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள் ,அந்த இளைஞர்களை தஞ்சாவூர் நகர கிழக்கு காவல் நிலைய காவலர்களும், தஞ்சாவூர் நகர மேற்கு காவல் நிலைய காவலர்களும் பிடித்து கைது செய்து பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்தார்கள்.
இந்நிலையில் இன்று மாலை 3.40 மணிக்கு சிகிச்சை பலனின்றி செந்தில் வேல் இறந்துவிட்டார். இவரது உடல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் போதையில் பணம் பறித்த இளைஞர்கள் மேல் போடப்பட்ட வழக்குகளின் பிரிவுகள் மாற்றப்படுகிறது. அதாவது ஏற்கனவே அடிதடி ,தகராறில் ஈடுபடுதல் போன்ற பிரிவுகளில் அவர்கள் மேல் இருந்த வழக்கை தற்போது கொலை வழக்காக மாற்றி இருப்பதாக தெரியவருகிறது. செந்தில் வேல் மரணம் அடைந்ததையொட்டி ரவுடிகளின் அராஜகத்தை கண்டித்து தஞ்சை நகரில் நாளை கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்திருக்கிறது.