மாநாடு 5 September 2022
மனித குலத்துக்கே ஒரு பெரிய கெட்ட பழக்கம் உண்டு அது யாதெனில் போற்றி பாதுகாக்க வேண்டியவர்களை அவர்கள் உயிரோடு இருக்கும்போது பாதுகாக்காமல் விட்டுவிட்டு அவர்கள் மறைந்த பிறகு இறந்தவர்களை போற்றுவது, புகழ் பாடுவது என்கிற வழக்கம் இன்றும் தொடர்கிறது அதிலும் கூட போற்ற வேண்டியவர்களை முழுவதுமாக போற்றாமல் புறக்கணிப்பும் நடைபெறுவதை நாள்தோறும் நாம் காண முடிகிறது,
இவ்வாறாக மனிதகுலம் பாதுகாத்திருக்க வேண்டிய பல மாமனிதர்களில் வ.உ.சிதம்பரனார் மிகவும் குறிப்பிடத்தக்கவர், இப்போதெல்லாம் வேறு நாடுகளுக்குச் சென்று வணிக வர்த்தகம் செய்ய எங்கள் நாட்டிற்கு வாருங்கள் உங்களுக்கு இடமும் தருகிறோம் ,இலவசமாக மின்சாரமும் தருகிறோம் என்பது உட்பட பல ஒப்பந்தங்கள் போடப்படுவதை பெருமையாக பேசி வருகின்ற தற்கால அரசியல்வாதிகளை அறிந்திருக்கும் மக்கள். வ.உ.சி.யின் தியாகத்தையும் அவர் ஆற்றிய தொண்டையும் சிறிதளவாவது அவரின் 151 வது பிறந்த நாளான இன்று படித்து ,தெரிந்து ,தெளிய வேண்டியது மானிட குலத்தின் கடமையாகும்.
வ.உ.சிதம்பரம் பிள்ளை தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் 5-9-1872 ஆம் ஆண்டு உலகநாதன் பிள்ளை, பரமாயி அம்மையாருக்கு மகனாக பிறந்தார், பெரும் செல்வந்த குடும்பத்தில் பிறந்தவர் சிறந்த வழக்கறிஞராக திகழ்ந்தார். உண்மையான உணர்வோடு சுதந்திர வேட்கையோடு களம் கண்ட வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆங்கிலேயரை எதிர்த்து சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கினார். இந்த சுதேசி கப்பல் தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு இயக்கப்பட்டு வந்தது, ஆங்கிலேயருக்கு எதிராக பொருளாதாரத்திலும் நெருக்கடி கொடுப்பதற்காக போராடிய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் இறுதி காலத்தில் பொருளாதாரம் மிகவும் நலிவுற்ற நிலையில் வறுமையில் வாடி மறைந்தார்.
வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 151ஆவது பிறந்த நாளான இன்று அவரது கொள்ளு பேத்தி செல்வி பத்திரிகையாளர்களை சந்தித்தார் ,அப்போது அரசுகள் விடுதலைப் போராட்ட வீரரும் தனது தாத்தாவுமாகிய வ.உ. சிதம்பரனாருக்கு நாடாளுமன்ற வளாகத்தில் சிலை அமைக்க வேண்டும் என்றும் மேலும் அவர் பிறந்த தினமான செப்டம்பர் 5ஆம் தேதியை வழக்கறிஞர்கள் தினமாக கொண்டாட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
மானத்தை கப்பல் ஏற்றியவர்களை எல்லாம் மாபெரும் தலைவர்கள் போல காட்டுகின்ற இக்காலகட்டத்தில் மானத்தை காப்பதற்காக கப்பலோட்டிய மாமனிதருக்கு மரியாதை செலுத்த வேண்டியது மனசாட்சி உள்ள ஒவ்வொருவரின் கடமையாகும். வ.உ.சி வாரிசின் கோரிக்கையை அரசு ஏற்குமா பொறுத்திருந்து பார்ப்போம்.
வ.உ. சிதம்பரம் பிள்ளைக்கு மாநாடு இதழின் புகழ் வணக்கம்.