மாநாடு 15 May 2022
புகழ்பெற்ற மேடைப் பேச்சாளர் மதிமுக ,அதிமுக ,அமமுக போன்ற பல கட்சிகளில் இருந்து தற்போது திமுகவில் இருக்கும் நாஞ்சில்சம்பத் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு ரோட்டரி கிளப் நடத்தும் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருக்கிறார் ஏற்கனவே மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து நாஞ்சில் சம்பத் விமர்சித்து வந்தார் என்று கடுங்கோபத்தில் இருந்த எனது பாஜகவினர் இதனிடையே பொதுக்கூட்டங்களில், பாஜக தலைவர்களை ஒருமையில் தரக்குறைவாக பேசுகிறார் தான் ஒரு பெண் என்றும் பாராமல் இவ்வாறாக பேசி வருகிறார் என்று தமிழிசை சௌந்தரராஜனும் கூறியிருந்தார்.
இந்நிலையில் கும்பகோணத்திற்கு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்து விடுதியில் தங்கியிருந்ததார் நாஞ்சில் சம்பத். இந்த தகவலை அறிந்து நாஞ்சில் சம்பத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க பாஜக மாவட்டத் தலைவர் சதீஷ் தலைமையில் ஏராளமான பாஜகவினர் குவிந்து முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். தொடர்ந்து பாஜகவினர் நாஞ்சில் சம்பத்தை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.
நாஞ்சில் சம்பத் இருக்கும் இடத்தை பாஜகவினர் முற்றுகையிடுகிறார்கள் என்ற தகவலை அறிந்து சில நிமிடங்களில் அங்கு திமுகவினரும் திரளத் தொடங்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. கருத்தை கருத்தால் எதிர்கொள்வதை விடுத்து தனி மனிதர் மீது கும்பலாக வந்து தாக்குதல் நடத்த முயல்வது கோழைத்தனம் என திமுகவினரும், நாஞ்சில் சம்பத்தின் சொற்பொழிவுக்கு ரசிகர்களாக இருப்பவர்களும் வாதிட்டனர். காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததோடு நாஞ்சில் சம்பத் தங்கியிருக்கும் விடுதிக்கு பாதுகாப்பும் அளித்து வருகின்றனர்
பாஜகவினர் தாம் தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட முயன்ற நிகழ்வை நாஞ்சில் சம்பத் ஒரு பொருட்டாகவே கருதவில்லையாம். இது போன்ற வெற்றுக்கூச்சல்களை எத்தனையோ முறை தாம் பார்த்திருப்பதாகவும் தனது பேச்சை யாராலும் நிறுத்த முடியாது எனவும் அங்கிருந்த திமுகவினரிடம் கூறியிருக்கிறார்.
சிலர் இவர் ஒருமையில் பேசுவது ஒன்றும் புதிதல்ல எந்த கட்சியில் இருக்கிறாரோ அதற்கு எதிர்க்கட்சியாக இருக்கின்ற கட்சிகளை விமர்சனம் என்கிற பெயரில் இப்படி ஏதாவது பேசி கைத்தட்டு வாங்குவதும் சில மாதங்கள் அல்லது சில வருடங்களில் எந்த கட்சியை திட்டினாரோ அந்தக் கட்சியில் போய் உட்கார்ந்து கொண்டு ஏற்கனவே தான் இருந்த கட்சியை விமர்சிப்பது இவருக்கு வாடிக்கையான ஒன்றுதான் என்றும் பேசிக்கொண்டார்கள். நாஞ்சில் சம்பத் இருந்த பகுதியில் பாஜகவினரும் திமுகவினரும் குவிந்ததால் இவர்களை அப்புறப்படுத்தி நாஞ்சில் சம்பத்தை பாதுகாக்க காவல்துறையினரும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.