28 March 2024
முதலில் நம்பிக்கையை பெறுவது என்பது கடினம் அதிலும் அரசியல் களத்தில் அரிதிலும் அரிதாகவே அந்தத் தலைவரின் நம்பிக்கையைப் பெற்று இறுதிவரை உறுதியாக இருந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் அவ்வாறு மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோவின் பேரன்பையும் பெரும் நம்பிக்கையையும் இறுதிவரை உறுதியாக நின்று காத்தவர் ஈரோடு எம்பி கணேசமூர்த்தி கடந்த 24 ஆம் தேதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் இன்று காலை மரணம் அடைந்து விட்டார்.
வைகோ திமுகவிலிருந்து வெளியேறி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கிய போது திமுகவிலிருந்து 9 மாவட்டச் செயலாளர்கள் விலகி வைகோவின் தலைமையேற்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்கள் அதில் முக்கியமானவராக மதிமுகவை உருவாக்க உறுத்துணையாக வைகோவிற்கு இருந்தவராக அன்று முதல் இன்று வரை வைகோவின் நம்பிக்கையையும், பேரன்பையும் பெற்றவராக விளங்கியவர் ஈரோடு எம்பி கணேசமூர்த்தி.
வைகோ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கியபோது வைகோவோடு இருந்த பல முன்னணித் தலைவர்கள் இன்று தடம் மாறி எதோ ஒரு காரணத்தால் வெவ்வேறு அமைப்புகளில், கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்ட போதும் தான் கொண்ட உறுதியிலிருந்து இறுதிவரை தடம் மாறாமல் வைகோவின் தளபதியாக திகழ்ந்தவர் கணேசமூர்த்தி.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 1 மக்களவைத் தொகுதியும், 1 மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கிய போதும் கூட வைகோ ஈரோட்டில் ஒதுக்கப்பட்ட தொகுதியை கணேசமூர்த்திக்கு கொடுத்தார் அதன்படி அந்த தேர்தலில் கணேசமூர்த்தி ஈரோட்டில் வெற்றி பெற்று எம்பி ஆனார்.
இந்த நிலையில் வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவிற்கு ஒரு தொகுதியை மட்டும் திமுக ஒதுக்கியுள்ளது தனக்கு ஒதுக்கப்பட்ட திருச்சி தொகுதியில் வைகோவின் மகன் துரை வைகோ நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த நிலையில் வைகோவின் வலது கரமாக விளங்கிய ஈரோடு எம்பி கணேச மூர்த்தி கடந்த 24ஆம் தேதி தனது வீட்டில் வைக்கப்பட்டிருந்த தென்னை மரத்திற்கு இடப்படும் விஷ மருந்தை அருந்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கோவையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஈரோடு எம்பி கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்திருக்கிறார். இச்செய்தி கேள்விப்பட்ட மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ உடனடியாக நேரில் சென்று அவரின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்து வருகிறார். கோவையில் இருந்து உடற்கூறாய்வுக்காக ஈரோடு பெருந்துறை மருத்துவமனையில் கணேச மூர்த்தியின் உடல் வைக்கப்பட்டிருக்கிறது.