Spread the love

தென்மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சத்தை தீர்த்தவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ஓபிஎஸ்

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது முல்லைப்பெரியாறு அணை. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாகவும் வாழ்வாதாரமாகவும் முல்லைப் பெரியாறு அணை விளங்குகிறது.

தென்தமிழகத்தின் வறட்சியை கருத்தில்கொண்டு மக்களின் துயரத்தை போக்கும் வகையில் பல்வேறு இன்னல்களுக்கு இடையே தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்று முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் ஆங்கிலேயப்பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக்.

அவரை தேனி உள்ளிட்ட 5 மாவட்ட மக்களும் நன்றியோடு கடவுளாகவே வழிபடுகின்றனர். ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளான ஜனவரி 15ஆம் தேதி தேனி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் விவசாயிகள், பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்வது வழக்கம்.அதேபோல அவரது தியாகத்தை போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் தமிழக கேரள எல்லைப்பகுதியான லோயர் கேம்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் அவரது முழு உருவ வெண்கல சிலை வைக்கப்பட்டுள்ளது.

நேற்று 15-01-2022 ஜான் பென்னிகுயிக்கின் 181 வது பிறந்த தினத்தை முன்னிட்டு லோயர் கேம்ப்பில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள முழு உருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரன், சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என பலரும் மரியாதை செலுத்தினர்.

அதன் தொடர்ச்சியாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் நேரில் வந்து மணிமண்டபத்தில் உள்ள பென்னிகுயிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்‌.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் பென்னி குயிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்கின் தியாகத்தை போற்றும் வகையில் கடந்த 2013-ஆம் ஆண்டு அதிமுக அரசால் பென்னி குயிக் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நேரில் வருகை தந்து அதனை திறந்து வைத்தார்.
மேலும் தேனியில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்கும் பென்னி குயிக் பெயர் சூட்டி கவுரவிக்கப்பட்டுள்ளது’ என்று ஓபிஎஸ் நினைவு கூர்ந்தார்.

பென்னிகுயிக் பிறந்து வாழ்ந்த லண்டன் நகரில் அவருக்கு சிலை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு, ‘லண்டனில் உள்ள அவரது கல்லறை சேதமானபோது அதிமுக அரசுதான் அதனை சீர்செய்தது’ என்று ஓபிஎஸ் தெரிவித்தார்

6600cookie-checkஓபிஎஸ் நன்றியோடு மரியாதை செலுத்தினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!