Spread the love

மாநாடு 18 May 2022

கடந்த 31 ஆண்டு காலமாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்த பேரறிவாளனை சட்டப்பிரிவு 142 ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றமே அதிரடியாக விடுதலை செய்துள்ளது அதனையொட்டி தமிழக அரசியல் கட்சியின் பிரமுகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் அதன்படி

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை தமிழக பாஜக ஏற்றுக் கொள்கிறது. நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம் என தெரிவித்து உள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஒரு தாயின் அறப்போர் வென்றது. அற்புதம் அம்மாளின் உறுதிமிக்க, இடையறாத, சட்ட வழியிலான நெடும்போருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. அனைத்து சனநாயக சக்திகளின் நல்லாதரவு மற்றும் தமிழக அரசு நல்கிய ஒத்துழைப்பால் விளைந்த நீதி. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நேர்மைத்திறத்துக்கு எமது பாராட்டுகள்.

பேரறிவாளனுக்கு 30 ஆண்டுகளாக இழைக்கப்பட்ட அநீதி வீழ்த்தப்பட்டது. ஒரு நிரபராதிக்கு எதிரான இந்த அநீதிக்கு காரணமானவர்களுக்குச் சட்டம் என்ன தண்டனை வழங்கப் போகிறது? இத்தகைய கேள்விக்கு இங்கே விடை இல்லை. பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் மறுவாழ்வுக்கு ஒன்றியஅரசு என்னசெய்யப் போகிறது? ” என தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறுகையில், “31 ஆண்டு கால சட்ட ரீதியான போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது; உச்சநீதிமன்ற தீர்ப்பில் காங்கிரசுக்கு மாற்றுக் கருத்து கிடையாது” என தெரிவித்து உள்ளார்.

சிபிஐ பொது செயலாளர் டி.ராஜா கூறுகையில், “தமிழ்நாடு எதிர்பார்த்து இருந்த தீர்ப்பு உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது; ஆளுநரின் தவறான செயல்பாடு காரணமாக விடுதலை தாமதப்படுத்தப்பட்டது. தாய் அற்புதம்மாள் எடுத்த முயற்சி கொஞ்சம் நஞ்சம் அல்ல; அனைத்து குடிமக்கள் போல இயல்பு வாழ்க்கையை வாழ வேண்டும்; மக்களுக்கு பணியாற்ற வேண்டும்” என கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அரசியல் சாசன அடிப்படையில் மாநில அரசின் தீர்மானத்தை தடுக்க யாருக்கும் அதிகாரமில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு என பதிவிட்டுள்ளார்.

பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள பதிவில், “மகனுக்கான ஒரு தாயின் போராட்டம் வென்றுள்ளது” என குறிப்பிட்டு உள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், எந்த தவறும் செய்யாமல், இந்த இளைஞனுடைய இளமைக்கால வாழ்க்கை, சீர்குலைக்கப்பட்டு விட்டது. இப்போது, உச்சநீதிமன்றம் நீதியை நிலைநாட்டி இருக்கின்றது; மகிழ்ச்சி. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போலவே, மற்ற 6 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என தெரிவித்து உள்ளார்

35400cookie-checkபேரறிவாளன் விடுதலையும் அரசியல் பிரமுகர்களின் கருத்தும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!