Spread the love

மாநாடு 16 June 2022

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரம் துலுக்கவேலி அய்யா கோயில் தெருவை சேர்ந்தவர் சேகர் இவருக்கு 24 வயதுடைய சரண்யா என்கிற மகள் இருந்தார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள பொன்னூரை சேர்ந்தவர் வடிவேல் இவருக்கு 31 வயதுடைய மோகன் என்கிற மகன் இருந்தார். இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்றும் சரண்யா பட்டியலினத்தவர் என்றும் மோகன் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது . மோகனின் தாயாரும் சரண்யாவின் தாயாரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தாயாரின் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்திருக்கிறார்கள் .அங்கே பழக்கம் ஏற்பட்டு சரண்யாவும், மோகனும் காதலிக்க தொடங்கியுள்ளனர் இது சரண்யாவின் வீட்டிற்கு தெரிய வந்தவுடன் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். எதிர்ப்பை மீறி சரண்யாவும் மோகனும் திருமணம் செய்திருக்கிறார்கள், ஐந்து நாட்களுக்குப் பிறகு சரண்யாவின் சகோதரர் அலைபேசியில் தொடர்புகொண்டு தங்களுக்கு பெண் வீட்டில் விருந்து வைக்க வேண்டி இருக்கிறது ,ஆகவே தாங்கள் வரவேண்டும் நாங்கள் நடந்தவற்றை மறந்துவிட்டோம் நீங்கள் அவசியம் வீட்டிற்கு வரவேண்டும் என்று நம்பும் படி பேசி அழைத்திருக்கிறார்கள், இதனை உண்மை என்று நம்பி சரண்யாவும் மோகனும் சோழபுரம் வந்திருக்கிறார்கள், அவர்களை பெண்ணின் சகோதரரும் ,நண்பரும் சேர்ந்து இருவரையும் அரிவாளால் வெட்டி படுகொலை செய்திருக்கின்றார்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில் சாதி ஆணவ படுகொலையில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டால் கொதித்தெழுந்து போராட்டம் நடத்தும் அரசியல்வாதிகளும், சமூக ஆர்வலர்களும் இந்த நிகழ்வுக்கு பெரிய கண்டனத்தை அழுத்தமாக தெரிவிக்கவில்லை என்று பெரும்பாலானவர்கள் பதிவிட்டு இருந்தார்கள்.

இந்த ஆணவப்படுகொலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கண்டனத்தை அறிக்கையின் மூலம் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்:

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரத்தைச் சேர்ந்த சரண்யாவும், மோகனும் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களைப் பெண்ணின் சகோதரனும், மைத்துனனும் விருந்து வைப்பதாகக் கூறி, வீட்டுக்கு அழைத்து வெட்டிப்படுகொலை செய்திருக்கிற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். தங்களது விருப்பத்தின் பெயரில், காதலித்து, சாதியை மறுத்து திருமணம் செய்து கொண்டதாலேயே, குடும்பத்தினரால் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதை, ‘சாதிய ஆணவப்படுகொலை’ என்றே பதிவுசெய்ய வேண்டும். அவ்வாறு பதிவுசெய்ய மறுப்பதும், இதனைப் பழிவாங்கும் போக்கோடு நிகழ்த்தப்பட்ட கொலையென்றுகூறி சுருக்குவதும் ஏற்புடையதல்ல.

18 வயதினைப் பூர்த்திசெய்த எவரும் மனமொத்து திருமணம் செய்துகொள்வதற்கு சட்டமும், சனநாயக அமைப்பு முறைகளும் வழியேற்படுத்தி இருக்கிற நிலையில், சாதியின் பெயரால் நடக்கிற கோரமான இத்தகைய ஆணவக்கொலைகள் கடும் கண்டனத்திற்குரியவையாகும். அறிவியலும், விஞ்ஞானமும் வளர்ச்சிபெற்று குடிமைச்சமூகமாக வாழ்ந்து வருகிற 21 ஆம் நூற்றாண்டிலும் சாதியின் பெயரால் நடக்கிற படுகொலைகள் ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வெட்கித் தலைகுனியச்செய்கின்றன. பிறப்பின் வழியே பேதம் கற்பித்து, மானுடச்சமூகத்தைப் பிளந்து பிரிக்கிற சாதி எனும் வருணாசிரமக்கட்டமைப்பை எதன்பொருட்டும் ஏற்க முடியாது. மனித மனங்களில் புரையோடிப் போயிருக்கிற சாதி எனும் சமூகப்புற்றால் நிகழ்ந்தேறும் வன்முறைகளும், தீண்டாமைக்கொடுமைகளும், ஆணவப்படுகொலைகளும் கடும் கண்டனத்திற்குரியதாகும். இவற்றை சட்டத்தின் துணைகொண்டு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது அரசின் தார்மீகக்கடமையும், சமூகப்பொறுப்புமாகும்.

ஆகவே, கும்பகோணம் தம்பதிகளான சரண்யா – மோகன் மரணத்திற்குக் காரணமான கொலைகளைக் கடுஞ்சட்டத்தின் கீழ் பிணைத்து, அவர்களுக்கு உரிய தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும், அதிகரித்து வரும் ஆணவக்கொலைகளைத் தடுக்க தனிச்சட்டமியற்ற வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்தி இருக்கிறார்.

38970cookie-checkஎந்த சாதியினர் செய்தாலும் ஆணவப்படுகொலை ஏற்புடையதல்ல சீமான் கண்டனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!