மாநாடு 20 May 2022
தஞ்சாவூர் நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய ஆற்றுப்பாலங்கள் 2 ஒன்று நீதிமன்ற சாலைக்கு அருகில் இருக்கும் இர்வின் ஆற்றுப்பாலம் மற்றொன்று கருந்தட்டாங்குடியில் இருக்கும் வடவாறுப்பாலம் இந்த இரு பாலங்களையும் இடித்துவிட்டு புதிய பாலங்கள் கட்டுவதற்காக பணிகள் தொடங்கப்பட்டது .அதன் காரணமாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி அன்று செய்தி ஊடகங்கள் வாயிலாக இதனை அறிவித்திருந்தார். அதன்படி மார்ச் மாதம் 9ஆம் தேதி முதலில் இர்வின் ஆற்றுப்பாலம் இடிக்கப்பட்டது போக்குவரத்துகள் மாற்றி அமைக்கப்பட்டது.
அதன் பிறகு கருந்தட்டாங்குடியிலுள்ள வடவாறு பாலம் இடிக்கப்பட்டு போக்குவரத்துக்கள் மாற்றியமைக்கப்பட்டது, இதில் இர்வின் ஆற்றுப் பாலம் பகுதியில் காலை ,மாலை நேரங்களில் போக்குவரத்து நெருக்கடிகள் ஆரம்பத்தில் அதிகமாக இருந்தது. அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டும் விதமாக நமது மாநாடு இதழின் மூலம் செய்தி வெளியிட்டிருந்தோம், இதுமட்டுமல்லாமல் பல சமூக ஆர்வலர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் எடுத்துக் காட்டி இருந்தார்கள் அதனையும் கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அதனை சரி செய்த காரணத்தினால் தற்போது பெருமளவு நெருக்கடிகள் குறைக்கப்பட்டிருக்கிறது ,ஆனால்
கருந்தட்டாங்குடி ஆற்றுப்பாலம் மாற்று பாதையான பழைய திருவையாறு சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருந்தது இதனை எடுத்துக்காட்டும் விதமாக கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி நமது மாநாடு இதழ் செய்தி வெளியிட்டிருந்தது.அந்த பாதை வழியாக உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் மேற்கொண்டு வந்து கொண்டிருக்கிறது, ஆனால் அந்தப் பாதையில் அந்த சமயத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டு குளம்போல காட்சியளித்தது ,இதனையும் சுட்டிக் காட்டி இருந்தோம். அதன்பிறகும் சில நாட்கள் சரி செய்யப்படாமல் அப்படியேதான் இருந்தது ,அதன் காரணமாக அந்த மண்டலத்தின் உதவி பொறியாளர் அறச்செல்வி அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசினோம் ,அதனை உடனடியாக சரி செய்வதாக கூறினார் .அடுத்த இரண்டு நாட்களிலேயே அந்தப் பள்ளம் சரி செய்யப்பட்டது. அதனையும் சுட்டிக்காட்டி உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் நன்றியையும் ,வாழ்த்துக்களும் தெரிவித்திருந்தோம், அந்த செய்தியிலேயே இன்னும் பல இடங்கள் பள்ளங்கள் இருப்பதாக சுட்டிக் காட்டி இருந்தோம் ,ஆனால் இன்று வரை அது சரி செய்யப்படாததால் அந்தப் பகுதியில் போக்குவரத்துக்கள் செல்ல மிகவும் கடினமாக இருக்கிறது, அதுமட்டுமல்லாமல் அதற்கு மற்றுமொரு மாற்றுப்பாதையான வடவாறு பாலம் அருகில் இருக்கும் அரசு பணிமனை ஒட்டிய சாலையிலும் தற்போது ஜல்லி கற்களை கொட்டி இருப்பதால் அந்தப் பக்கமும் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் பெண்களும், முதியவர்களும் மிகவும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.இருக்கின்ற 2 பாதையும் சாதாரணமாகவே யாரும் பயணிக்க முடியாத அளவுக்கு மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ,
இந்த மாற்று பாதைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் எவ்வளவு ,பார்க்கப்பட்ட வேலைகள் என்ன எந்த அதிகாரிகளின் பொறுப்பில், எந்த ஒப்பந்தக்காரர்கள் இதனை பார்த்தார்கள் என்கிற கேள்விகளையும் எழுப்பி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்களை கேட்டு இருப்பதாகவும் அது வந்தவுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாகவும் சமூக ஆர்வலர் ராஜா நம்மிடையே கூறினார் அதனையொட்டி நாமும் பாலங்கள் வேலைகள் நடைபெறுவதை சென்று பார்த்தோம். இர்வின் ஆற்றுப் பாலமும், வடவாறு பாலமும் துரிதகதியில் வேலைகள் நடைபெற்று வருகிறது ,ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும் அதற்கு முன்பாக இந்த பாலங்களின் வேலைகளை துரிதமாக முடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.
இந்த பாலங்கள் கட்ட ப்பட்டு திறக்கப்பட்டாலும் கூட பழைய திருவையாறு சாலையை சரி செய்து கொடுத்தால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். என்பதை சம்மந்தப்பட்டவர்கள் உணர்ந்து விரைந்து சரி செய்ய வேண்டும் என்பதே இச்செய்தியின் நோக்கம். சரி செய்யப்பட்டு விட்டால் அதனையும், சரி செய்யாவிடில் சமூக ஆர்வலர் ராஜா சம்மந்தப்பட்டவர்கள் மீது தொடுக்கும் வழக்கின் விவரங்களையும் நமது மாநாடு இதழில் வெளியிடுவோம்.