மாநாடு 15 June 2022
நீர் மேலாண்மையிலும், சாலைகள் போக்குவரத்திலும் ,கட்டிட கலையிலும் காலங்காலமாக சிறந்து விளங்கிய ஊர் தஞ்சாவூர். காலப்போக்கில் நகரமயமாக்கல் என்கிற பெயரில் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் எவ்வித தொலைநோக்கு திட்டங்களும் தீட்டப்படாமல் அப்போதைகாண திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வந்ததன் காரணமாக சூப்பர் சிட்டியாக இருந்த தஞ்சாவூர் சுமார் சிட்டியாக உரு மாறியது, இப்படி பல ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம், முறையற்ற முறையில் கட்டப்பட்ட மேரிஸ் கார்னர் மேம்பாலம், சில இடங்களில் தெருக்களில் சாலைகளில் பள்ளங்கள் குண்டு குழிகள் இருந்தது, இதனை முழுமையாக போக்குவதற்காக எந்தவித செயல்திட்டங்களும் தீட்டி செயல்படுத்தாமல் இருந்தது. தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகமும், ஆளும் கட்சிகளும், ஆண்ட கட்சிகளும் தான் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இந்த நேரத்தில் கடந்த டிசம்பர் 15, 2015 அன்று ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிவிக்கப்பட்டது அதன்படி எழில்மிகு நகரமாக மாற்றுவதற்காக தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்ட 12 நகரங்களில் தஞ்சாவூர் நகரமும் ஒன்றாகும். நகராட்சியாக இருந்த தஞ்சாவூர் மாநகராட்சியாக பெயர் மாற்றம் பெற்றது. அதன் பிறகு சுமார் சிட்டியாக சில தெருக்களில், சில இடங்களில் ,சில சாலைகளில், பள்ளங்களும், மேடுகளும் ,இருந்தது போக இப்போது பல தெருக்களையும் காணவில்லை, சாலைகளையும் காணவில்லை, அங்கிங்கெனாதபடி எங்கும் மேடும் ,பள்ளமும், சாக்கடை நீரும் ,மழை நீரும் தெருக்களையும், சாலைகளையும் ஆக்கிரமித்திருக்கிறது, குப்பை கூளங்களும், இறைச்சிக் கழிவுகளும், ஜல்லி கற்களும், கொட்டிக் கிடக்கின்றன,
இதனால் தஞ்சாவூர் மாநகரமே நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது.சாலைகளில் முதியவர்களும், பெண்களும், பணிகளுக்கு செல்பவர்களும், பயணிக்க முடியாத அளவிற்கு பழுதாக இருக்கிறது,
தஞ்சாவூர் நகரத்தை இணைக்கும் இரண்டு ஆற்று பாலங்களை இடித்துவிட்டு புதிதாக பாலங்கள் கட்டும் திட்டத்திற்காக இர்வின் ஆற்று பாலமும், கருந்தட்டாங்குடி வடவாறு பாலமும் இடிக்கப்பட்டது, மாற்றுப்பாதை மாற்றுப் பாதையாக இல்லாததால் மக்கள் பட்ட அல்லல்களை அவ்வப்போது நமது மாநாடு இதழில் வெளியிட்டு இருக்கிறோம்.
கருந்தட்டாங்குடி ஆற்றுப் பாலம் திறக்கப்பட்டது இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் அந்த பாதையை பயன்படுத்தி வருகிறார்கள் ஆனாலும் அந்த பாதை திறக்கப்பட்டதில் இருந்து காலை, மாலை நேரங்களிலும் பல நேரங்களிலும் போக்குவரத்து நெரிசல்கள்
அதிகமாக அந்த பகுதியில் இருக்கிறது இன்னமும் வடவாறு பாலம் கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .அதற்கு பொருட்கள் இறக்குவதற்காக வருகின்ற வாகனங்கள் இரவு நேரங்களில் வராமல் பகல் நேரங்களில் வருகிறது இன்று காலை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நேரத்தில் ஆர்.ஆர்.கன்ஸ்ட்ரக்ஷன் லாரி சாலையை மறைத்துக்கொண்டு குறுக்கே நிறுத்தி பொருட்களை இறக்கியது, இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டது. இதனால் முதியவர்களும் பெண்களும் பணிகளுக்கு செல்பவர்களும் மிகவும் அல்லல் பட்டனர், பொது மக்கள் பயணிக்க முடியாமல் கோபத்தில் கொந்தளித்தார்கள் ,தஞ்சாவூரில் மட்டும்தான் அதிகாரிகள் ராத்திரில பார்க்க வேண்டிய வேலையை பகல்ல பாக்குறாங்க என்று ஒருவர் வசை பாடியது நமது காதில் விழுந்தது, ஏன் இப்படி செய்யறாங்கன்னு தெரியலனு ஒரு வார்த்தை சொல்லி அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் ஒருவர் திட்டிக் கொண்டே வாகனத்தை திருப்பி சென்றார், முறையாக திட்டமிட்டு செயல்கள் செய்தால் மக்கள் இவ்வாறான அவதிக்குள்ளாகும் நிலை இருக்காது .
மாவட்ட நிர்வாகம் மனது வைத்தால் பொதுமக்களை துன்பத்தில் இருந்து காக்க முடியும். மனது வைக்குமா மாவட்ட நிர்வாகம்?