மாநாடு 16 June 2022
எப்போதுமே சமூக சீர்கேடுகளில் அதிகமாக சிறுவர்களையும், இளைஞர்களையும் சென்று சேர்ந்து சீரழிப்பதில் திரைப்படத்திற்கும் அதில் நடிக்கும் நடிகர்களுக்கும் அதிக பங்கு இருக்கிறது. அப்படிதான் கதாநாயகர்கள் முடிவெட்டி இருப்பதைப் பார்த்து இவர்கள் முடிவெட்டி கொள்வதும், வாகனங்கள் ஓட்டுவதை பார்த்து இவர்களும் தெருக்களில் வாகனங்களை ஓட்டி பலரையும் படுகாயம் அடைய செய்கிறார்கள் அதிலும் சமீபகாலமாக சிறுவர்கள் 2 க்கும் மேற்பட்டவர்கள் ஒரே வாகனத்தில் ஏறி சீறிப் பாய்கின்றனர் .இதனால் சாலைகளில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது, இதனைக் கட்டுப்படுத்தி தடுக்கும் விதமாக சென்னையில் சிறார்களுக்கு எதிரான வாகன தணிக்கையில் போக்குவரத்து காவல்துறை கடந்த 14ஆம் தேதி செய்தது. இதில் 575 வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்திருப்பதாகவும் சிறார்களின் பெற்றோரை வரவழைத்து அறிவுரை வழங்கி உறுதிமொழி கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு அரசு விதியின் படி வசூலிக்க வேண்டிய அபராத தொகையையும் வசூல் செய்திருப்பதாக சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவிக்கின்றது.
இந்த நடவடிக்கையை தமிழகம் முழுவதும் நடத்தி வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று கும்பகோணம் அருகே தென்னூரில் ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பாகவே 17 வயது சிறுவன் ரேஸ் பைக்கை வேகமாக ஓட்டி வந்து ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க வந்த அரசு பள்ளியின் தலைமையாசிரியர் 55 வயது உடைய ராஜி என்பவர் மீது மோதியதில் தலைமையாசிரியர் பரிதாபமாக தனது இன்னுயிரை இழந்து இருக்கிறார். இதில் இந்த சிறுவன் சிறியவன் என்பதால் வழக்கும் பதிய முடியாது அதேவேளை இவனின் அறியாமையால் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி வந்ததன் விளைவாக அப்பாவி உயிரிழந்திருக்கிறார் ,எனவே இந்த வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் மேலும் சிறுவனுக்கு இந்த வாகனத்தை வாங்கிக் கொடுத்த பெற்றோர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். இதனை தடுக்கும் விதமாக சென்னையில் நடத்தப்பட்டது போல் வாகன தணிக்கையை தஞ்சை பகுதியிலும் தமிழ்நாடு முழுவதிலும் நடத்திட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.