மாநாடு 9 June 2022
தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உலகப்புகழ் பெற்றது அதனால் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் இங்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள்.
சுற்றுலாவுக்காக வருபவர்களுக்கும், வரம் கேட்டு வருபவர்களுக்கும், வயிற்றைப் புரட்டிக் கொண்டு வாந்தி வரும் அளவிற்கு அசுத்தமாக, நோய் பரப்பும் ஊராக மாறிக்கொண்டிருக்கிறதாம் தஞ்சை மாரியம்மன் கோயில்.
நாகையிலிருந்து தஞ்சைக்கு வரும் புறவழி சாலை பிரிவில் இந்த அவலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம் .இதனைப் பற்றி சமூக ஆர்வலர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் :தஞ்சை மாநகரின் நுழைவு வாயில் மாரியம்மன் கோவில் பிரிவு சாலை இங்கு இரவு நேரங்களில் குப்பைகளை வாகனங்களில் எடுத்து வந்து கொட்டுகிறாரர்கள். கெட்டுப்போன காய்கறிகள், கறி, மீன் ,இறைச்சி கழிவுகளையும் கொட்டுகிறார்கள்.
இறந்த ஆடுகள், மாடுகளும் இந்த இடத்தில் வீசப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இறைச்சி கடைகள் உணவு விடுதிகள் இக்கழிவுகளை இரவு நேரங்களில் கொண்டு வந்து கொட்டுகிறார்கள் என்று அப்பகுதியில் வாழும் மக்கள் கூறுகிறார்கள். மாரியம்மன் கோவில் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் புகாரளித்தும் இதுவரை எந்த பயனும் இல்லை என்று தெரிவிக்கிறார்கள்.
இந்த பகுதியிலேயே வசிப்பவர்களுக்கும், இங்கு வந்து போவோர்களுக்கும் நோய்தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது.
இப்பகுதியில் 8 கோடி செலவில் சமுத்திரம் ஏரியை சீரமைத்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் ஆபத்தை உணர்ந்து அவலத்தைப் போக்குவதற்காக மாரியம்மன் கோவில் பகுதியில் குறிப்பிட்ட தொலைவில் நவீன குப்பை கிடங்கு அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றார்கள்.
இதில் உடனடியாக நடவடிக்கை எடுத்து உள்ளூர் மானத்தை உலகில் இருந்து வருபவர்கள் வாங்காத அளவிற்கு காக்க வேண்டிய கடமை அதிகாரிகளுக்கும் ,ஆளும் கட்சிக்கும் இருக்கிறது.