மாநாடு 10 May 2022
மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. அப்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமில்லை என தெரிவித்திருந்தார். இந்த நிலைமையில் ஆசிரியர்கள் கூட்டமைப்பு அமைச்சரின் பேச்சு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்திருக்கின்றது. ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினரும் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில தலைவர் செ.நா. ஜனார்த்தனன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் குறிப்பிட்டு இருப்பதாவது :
திமுக தேர்தல் அறிக்கையில் 309 வது உறுதிமொழி பழைய ஓய்வூதியத் திட்டம் மறுபடியும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது தவிர தமிழக முதல்வரும் தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையில் உறுதியளித்திருந்தார். ஆனால் தமிழக முதல்வரின் அறிவிப்பிற்கும், தேர்தல் வாக்குறுதிக்கு எதிராகவும் நிதியமைச்சர் சட்டப்பேரவையில் சனிக்கிழமை நடைபெற்ற மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமில்லை என தெரிவித்திருப்பது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்ககும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வு வருடந்தோறும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் நிதி பற்றாக்குறையை காரணம் கூறி சமூக நீதி அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என அமைச்சரால் ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. முதல்வர் ஸ்டாலினும் அரசு ஊழியர்கள் சங்க மாநாட்டில் கோரிக்கைகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என உறுதி அளித்திருந்த நிலையில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் பழைய ஓய்வூதியம் சாத்தியமில்லை எனக் கூறியிருப்பது அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தையும், எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக உள்ளது.அரசு ஊழியர்கள் மாநாட்டில் உங்களோடு நான் இருக்கிறேன் என நம்பிக்கை ஏற்படுத்திய முதல்வர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு தமிழக அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என அறிக்கையின் வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார்.
