மாநாடு 13 January 2023
கடந்த சில ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வெப்பநிலை குறைந்து பனி அதிகம் இருப்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து , அனுபவித்து வருகிறோம்.
இதைக் குறித்து சென்னை மண்டல வானிலை மையம் அறிவித்திருப்பதாவது: உள் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும் என்றும், சில பகுதிகளில் பகல் நேரங்களில் வெகு நேரம் லேசான பனிமூட்டங்கள் இருக்கக்கூடும் என்றும் அறிவித்திருக்கிறது.
அதேபோல நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களிலும் அதனை ஒட்டிய மலைப்பகுதிகளிலும் உறைபனிக்கு வாய்ப்புள்ளதாகவும் ,சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கலாம் என்றும் வானிலை மையம் கணித்திருக்கிறது.
இக்கால கட்டங்களில் நாம் ஒன்றை நினைவில் நிறுத்தி பார்க்க வேண்டும். சமீப காலமாக வெயில் காலங்களில் உடல் பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு அதிகமான வெப்பம் இருப்பதையும், அதேபோல பனிக்காலங்களில் அதிகப்படியான பணி இருப்பதையும், மழை பெய்ய வேண்டிய காலங்களில் பருவங்கள் தவறி மழை பெய்வதையும் பார்த்து, அனுபவித்து வரும் நாம் ஏன் இது நடக்கிறது என்று சிந்தித்திருக்கிறோமா?
இன்னமும் இதுபோல அதிக அளவில் பருவநிலை மாற்றம் ஏற்படும் என்று அறிந்தவர்கள் சொல்லியதை, சொல்வதை பார்க்கிறோமா, படிக்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். மண்ணை நேசித்த இம்மண்ணின் மகன் நம்மாழ்வார் இதைப் பற்றி குறிப்பிடும் போது இனி பருவமழை இல்லை, புயல் மழை தான் தமிழகத்தில் பெய்யும் என்று பேசி இருக்கிறார், எழுதியிருக்கிறார். அதனை நாம் தேடி படித்து தெரிந்து, தெளிய வேண்டும், ஏனெனில் இந்த பூமி நமக்கானதல்ல அடுத்த தலைமுறைக்கானது என்பதை உணர்ந்து நடக்க வேண்டும்.