மாநாடு 2 July 2022
திருச்சி சிறப்பு முகாமில் ஈழத்தமிழர்கள் 104 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தினார்கள், இவர்களில் ஒருவரான உமாரமணன் என்பவர் விடுதலையை வலியுறுத்தி தீக்குளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது, பல தலைவர்களும் இவர்களின் போராட்டத்திற்காக குரல் கொடுத்தார்கள்.
மேலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வழிகாட்டுதலில் இவர்களின் விடுதலைக்காக பெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி பல வகைகளில் முன்னெடுத்தது ,அதன் ஒரு பகுதியாக ஈழ தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி கடந்த மாதம் 5-ம் தேதி திருச்சி சிறைச்சாலைக்கு வெளியே நாம் தமிழர் கட்சியின் திருச்சி பாராளுமன்ற பொறுப்பாளர் வழக்கறிஞர் பிரபு முன்னெடுப்பில் ஏறக்குறைய 1000 பேர் நாம் தமிழர் கட்சியினர் சிறை முற்றுகை போராட்டத்தை நடத்தினார்கள்.
இந்நிலையில் இன்று திருச்சி சிறப்பு முகாமில் இருந்த ஈழத் தமிழர்கள் மகேந்திரன், டேவிட், சங்கர், நிரூபன், பிரேம்குமார், தேவராஜ், ரீகன், பிரான்சிஸ், முகுந்தன், சுதர்சன், எப்சிபன், திலீபன், ராஜிவன், நகுலேஷ், இட்டாலி ராஜன், கிருபராஜா உள்ளிட்ட 16 ஈழத் தமிழர்களை தமிழக அரசு விடுதலை செய்திருக்கிறது,
இவர்களை விடுதலை செய்ததற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் மீதமுள்ள ஈழத் தமிழ் உறவுகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தனது அறிக்கையின் மூலம் வலியுறுத்தி இருக்கிறார்.
இந்நிலையில் நாளை காலை 10 மணி அளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அக்னிபத் திட்டத்தை கைவிடக் கோரியும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சியில் ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி சிறை முற்றுகை போராட்டத்தை நடத்திய நாம் தமிழர் கட்சியின் பாராளுமன்ற பொறுப்பாளர் வழக்கறிஞர் பிரபு கூறியதாவது : சிறப்பு முகாமில் மொத்தம் 104 பேர் இருந்தார்கள், அவர்களில் 16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் மீதமுள்ளவர்களையும் விடுதலை செய்து சிறப்பு முகாம் என்கிற பெயரில் இருக்கும் சித்திரவதை முகாமை இழுத்து மூடும் வரை நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போராடும்.
வெளியில் வந்தவர்கள் அண்ணன் சீமான் அவர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்தார்கள் அவர்களை நாங்கள் நேரில் சென்று வெளியே வந்தவர்களை வரவேற்றதில் மகிழ்ச்சி கொள்கிறோம்
அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் எங்களது சார்பாகவும் நன்றியை தெரிவிப்பதாக கூறினார்.