Spread the love

சீமான் சூளுரை

உயிர்மொழி தமிழ்காக்க தன்னுயிர் ஈந்த ஈகியர்களது கனவை நிறைவேற்ற மொழிப்போர் நாளில் உறுதியேற்போம் – சீமான் சூளுரை

மொழி என்பது வெறுமனே தொடர்புக்கருவி மட்டுமல்ல! அது பின்னவர்கள் வாழ்வதற்கு முன்னவர்கள் விட்டுச் செல்கிற மூச்சுக்காற்று. மொழியானது ஒவ்வொரு தேசிய இனத்தின் முகம், முகவரி, அடையாளம். மொழி என்பது மனிதப் படிமலர்ச்சியினுடைய மாபெரும் பாய்ச்சல். அதனை உலகிலுள்ள உயிர்களில் மனிதர்களுக்கு மட்டுமேயான அமுதச்சுரபி என்கிறார்கள். தேசப்பரப்பை வரையறுக்கிறபோது நிலப்பரப்பை வைத்தோ, மதங்களை வைத்தோ வரையறுப்பதில்லை. மொழியை வைத்துதான் தேசங்களும், தேசிய இனங்களும் வரையறை செய்யப்படுகின்றது. தமிழர் என்ற தேசிய இனத்தின் முகமாக, முகவரியாக நம் தாய்மொழி தமிழேயாகும். ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்று பாடினார்புரட்சிப்பாவலர் பாரதிதாசன். உயிருக்கு நிகரான தமிழ்மொழிக்கு இந்தி மொழித்திணிப்பினால் தீங்கு ஏற்படக்கூடாது என்பதற்காக பல நூற்றுக்கணக்கான வீரமறவர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து தாய்மொழி காக்கத் துணிந்தனர். ‘செந்தமிழுக்கு ஒரு தீங்கு வந்த பின்னும் இந்த தேகம் இருந்ததொரு லாபம் உண்டோ?’ எனப் பாடிய புரட்சிப்பாவலர் பாரதிதாசனின் வரிகளுக்கேற்ப ஏப்ரல் 21, 1934 அன்று ராஜாஜி தலைமையிலான சென்னை மாகாண அரசு இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்க அரசாணை வெளியிட்டபோது தமிழர்கள் கொதித்தெழுந்து தமிழ்மொழி காக்க, தன்னுயுயிரைத் தாரை வார்க்க வீதிகளில் திரண்டனர்.
சென்னையில் மொழிப்போராட்டத்தில் பங்கேற்றுச் சிறைக்கு சென்ற ஐயா நடராசன் அவர்கள் தன் உடல்நலம் குன்றியபோதும் போராட்டத்தில் இருந்து பின்வாங்காது சாவுக்குத் துணிந்து நின்றார். மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்தால் விடுதலை செய்வதாக அரசு அறிவித்தும்கூட மன்னிப்புக் கேட்க மறுத்து. சனவரி 15, 1939 அன்று சிறையிலேயே வீரச்சாவைத் தழுவினார். மொழிப்போராட்டக்களத்தில் பாட்டன் நடராசன் செய்த உயிரீகம் இலட்சக்கணக்கான தமிழர்களைத் தட்டியெழுப்பியது. அதன் தொடர்ச்சியாக, கும்பகோணத்தைச் சேர்ந்த தாளமுத்துவும் சனவரி 13, 1939 அன்று சென்னை சிறையில் உயிர்நீத்தார்.

இந்த இரண்டு உயிரீகங்களால் போராட்டம் மேலும் தீவிரம் அடையவே இந்தியை பயிற்று மொழியாக்குவது தொடர்பான அரசாணையை அப்போதைய தமிழக அரசு பிப்ரவரி 21, 1940 அன்று திரும்பப்பெற்றது. மீண்டும் ஓமந்தூர் ராமசாமி அவர்கள் முதல்வராக இருந்தபோது இந்தி கட்டாயப் பாடமாக்கப்படும் என ஆணை பிறப்பிக்கப்பட்டபோது அதை எதிர்த்து, மீண்டும் கிளர்ச்சி ஏற்பட்டதால் அரசு பின்வாங்கியது. பாராளுமன்றத்தில் அப்போதைய பிரதமர் நேரு இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சி மொழியாக தொடரும் என அளித்த உறுதிமொழியால் போராட்டம் அப்போதைக்கு மௌனித்தது. மீண்டும் 26-1-1965 அன்று முதல் இந்தி ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்கின்ற ஆட்சிமொழி சட்ட மசோதாவால் மீண்டும் தமிழ்நாடு போராட்டக்களமானது. கீழப்பழுவூர் சின்னசாமி சனவரி 25, 1964 அன்று தமிழ் மொழி காக்க திருச்சி தொடர்வண்டி நிலையம் எதிரே தீக்குளித்து உயிரீகம் செய்தார். அவரது வரிசையில் பல தமிழர்கள் இன உணர்வினால் தன் தாய்மொழி காக்க தன்னுயிர் தந்து தமிழின வரலாற்றில் விதைகளாக மாறிப்போனார்கள். சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சிவகங்கை ராஜேந்திரன், சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி என தமிழ் மொழி காக்க தன்னுயிர் தந்த மொழி ஈகிகளின் பட்டியல் நீளுகிறது.

இவ்வாறு தன் தாய் மொழிக்காக தன் உயிரை இழக்கத் துணிந்த கூட்டம் உலக வரலாற்றில் தமிழர்களைப் போல எவரும் இல்லை என்கிற தனித்த வரலாற்றுப்பெருமை நம் இனத்திற்குண்டு. ஆனாலும், இந்நொடி வரை நம் உயிருக்கு நிகரான தமிழ் மொழி அரச மொழியாகவோ, அதிகார மொழியாகவோ, நீதிமன்ற மொழியாகவோ, வழிபாட்டு மொழியாகவோ மாறுவதற்கு இன்னும் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம் ‘எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!’ என சொல்லி ஆட்சிக்கு வந்த திராவிட ஆட்சியாளர்கள் எங்கேயும் இல்லை தமிழ் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள்.

பெயருக்குத்தான் இது தமிழ்நாடு! ஆனால், தமிழுக்கும், தமிழருக்கும் இது சுடுகாடு என்கின்ற நிலைக்கேற்ப தமிழ்நாட்டு வீதிகளில் எங்கும் தமிழ் இல்லை என்றாகிவிட்டது. தமிழர் நாவினில், தமிழர் வாழ்வினில் தமிழுக்குப் பஞ்சம். தூய தமிழ் பெயர்ப்பலகைகளை தமிழ்நாட்டில் காண்பது அரிது. தமிழர்கள் தங்கள் தாய்மொழியில் பெயர் வைத்துக் கொள்ளத் தயங்குகிறார்கள். தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா? என்று கேட்கின்ற இழிநிலை; தாழ்வு மனப்பான்மையால், தான்மை என்ற உணர்வினால் தமிழர் தன் சொந்த நிலத்திலேயே வாழ்விழந்து, தன் மொழியின் உரிமையிழந்து தவித்து வருகிறார்கள்.

கடந்த 2009ஆம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்ற தமிழினப் படுகொலைக்குப் பிறகான காலகட்டத்தில் தமிழர் என்கின்ற தன்மான உணர்ச்சி தமிழ்நாட்டில் எழுச்சிபெற்று வருகிறது. தமிழின இளையோர் தன் மொழி காக்க, தன் நிலம் காக்க, ‘நாம் தமிழர்’ என அணி வகுக்கின்ற காலம் உருவாகி இருக்கிறது. மொழிப்போர் ஈகிகளது வரலாற்றை உலகெங்கும் கொண்டுபோய் சேர்க்க வேண்டியது தமிழர்கள் ஒவ்வொருவரது தார்மீகக்கடமை என்பதை உணர வேண்டியது அவசியமாகிறது. மொழி வாழ்ந்தால்தான் இனம் வாழும்; இன உணர்வு இருந்தால்தான் நாம் நம் நிலத்தில் வாழ முடியும் என்கின்ற புரிதலும், பொறுப்புணர்வும், வரலாற்று அறிதலும் தமிழருக்கு ஏற்படவேண்டும். அதற்கு இந்நாளில் ஒவ்வொரு தமிழரும் உளப்பூர்வமாக உறுதியேற்க வேண்டும்.
எந்தத் தன்னலமும் இல்லாமல், தன் வாழ்வு பாராமல், நம் மொழி காக்க தன்னுயிரை தந்த மான மறவர்களான மொழிப்போர் ஈகிகளை ஒவ்வொரு தமிழரும் நினைவில் சுமந்து, அவர்கள் எந்த கனவிற்காகத் தன்னுயிரை தந்தார்களோ, அந்தக் கனவை நிறைவேற்ற உழைப்பேனேன உறுதி ஏற்க வேண்டுமென உலகமெங்கும் வாழும் தமிழ்ச்சொந்தங்களுக்குப் பேரழைப்பு விடுக்கிறேன்!

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

10070cookie-checkசீமான் சூளுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!