திமுகவை எதிர்த்து விசிக போராட்டம்.
பிப்ரவரி 19ந்தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
இதையொட்டி அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம் காட்டி வருகின்றார்கள். சில இடங்களில் கூட்டணி கட்சிகளுடன் இடங்கள் பங்கீடு விஷயத்தில் இழுபறி நீடித்து வருகிறது.
அந்த வகையில் மயிலாடுதுறையில் நடந்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. மயிலாடுதுறை நகராட்சியை பொறுத்தவரை மொத்தம் 36 வார்டுகள் இருக்கின்றன.
அதில் 24வது வார்டு தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எப்படியும் இந்த இடங்களை திமுக தங்களுக்கு ஒதுக்கும் என்ற நம்பிக்கையில்,விசிக நகர செயலாளர் பிரபாகரின் மனைவி சுகந்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் ஆளாய் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதாவது கூட்டணி பங்கீடு இறுதி ஆவதற்குள் கடந்த வெள்ளி அன்று மனு தாக்கல் செய்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்றைய தினம் மயிலாடுதுறையில் திமுக, விசிக இடையில் இடங்கள் ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது.இதில் கட்சியின் மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் எதிர்பாராதவிதமாக விடுதலைச்சிறுத்தைகள் நமக்குதான் இந்த இடங்களை ஒதுக்கும் என்று நினைத்திருந்த 24 இடங்களையும் திமுக எடுத்துக்கொண்டது. இதை சற்றும் எதிர்பார்க்காத விசிக ஏமாற்றமடைந்தது. இந்த தகவல் நகர செயலாளர் பிரபாகருக்கு தெரியவந்தது. உடனே தனது ஆதரவாளர்களுடன் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நேற்று இரவு திரண்டு இருக்கிறார்கள் . அப்போது தலித் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். திமுகவை கண்டிக்கிறோம். இட ஒதுக்கீடு கிடைக்கும் வரை விட மாட்டோம். எங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம்.சாதி வெறி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சியை வஞ்சிக்காதீர்கள் என்று முழக்கங்களை எழுப்பியிருக்கிறார்கள்.
ஆனால் மயிலாடுதுறை திமுக தரப்பினர் கூறுகையில், கூட்டணிக்குள் இட ஒதுக்கீடு இறுதி செய்யப்படுவதற்குள் எப்படி வேட்புமனு தாக்கல் செய்தார்கள்?
இது ஏற்கக்கூடிய விஷயமல்ல. கூட்டணி பேச்சுவார்த்தையில் சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும்.அது கடைசி நேரத்தில் கூட மாறலாம்.எனவே தனிப்பட்ட நபர்கள் ஏமாற்றமடைந்தால் அதற்கு கட்சி தலைமை ஒன்றும் செய்ய முடியாது. ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்றுக்கொண்டு ஒற்றுமையான முறையில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டால் தான் வெற்றி பெற முடியும்.
இல்லையென்றால் அவர்களுக்கு தான் நஷ்டம் என்று பதிலடி கொடுத்தனர். இதன்மூலம் மயிலாடுதுறை திமுக – விசிக கூட்டணிக்குள் உரசல் ஏற்பட்டு இருக்கிறது.