Spread the love

மாநாடு 3 March 2022

தமிழ்நாட்டில் மதுக்கடைகளுக்கு எதிராக தொடர்ந்து பல இயக்கங்களும் கட்சிகளும் பொதுமக்களும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடச் சொல்லி பெரும் போராட்டத்தை முன்னெடுத்து உள்ளார்கள். அதில் குறிப்பாக நினைவுகூற வேண்டும் என்றால் திருச்சியில் ஜூலை மாதம் 2015ஆம் ஆண்டு சத்திரம் பேருந்து நிலையம் அருகில் மதுக்கடைகளை இழுத்து மூடு என்று போராட்டம் நடத்திக்கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியினர் அந்த பகுதியில் இருந்த டாஸ்மாக் மதுக்கடையை அடித்து நொறுக்கியது அன்று பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.டாஸ்மாக் மதுக்கடையை அடித்து உடைத்த அந்த இளைஞர்கள் மீது தமிழக அரசு வழக்குப் போட்டு கைது செய்தது. டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பல போராட்டங்களை நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் முன்னெடுத்தது.

அதனைத் தொடர்ந்து கோயமுத்தூர் மாவட்டத்தில் அன்னூர் குடியிருப்பு பகுதியில் மதுக்கடையை திறக்கக் கூடாது என்று 29-04-2017ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டம் நடத்தினார்கள்.அதில் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தது.தமிழக அரசு இந்த வழக்கு 4-5-2017ஆம் ஆண்டு நீதிபதி கிருபாகரன் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது அந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட நீதி அரசர் மதுக்கடைகளை இழுத்து மூடச் சொல்லி போராட்டம் நடத்துபவர்களை இனி கைது செய்யக்கூடாது என்று தீர்ப்பளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமல்லாமல் காந்தியவாதி சசிபெருமாள் அவர்கள் மதுக்கடைகள் கூடாது என்பதற்காக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய போது தவறி விழுந்து தனது இன்னுயிரை விட்டார்.என்பதும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் அன்றைய அதிமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு கண்டனம் தெரிவித்தார்கள் என்பதும் நினைவுகூறத்தக்கது.

இந்த நிலையில்தான் இன்று தமிழக அரசின் அறிக்கைக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இவ்வாறு அறிக்கை விட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் புதிதாக மதுக்கடைகளை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதுகுறித்து மாவட்ட ஆட்சியர்கள் மறு ஆய்வு செய்வதை கட்டாயமாக்கி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

மேலோட்டமாக பார்த்தால் மதுக்கடைகளை திறக்கும் விஷயத்தில் மக்களின் உணர்வுகளுக்கு தமிழக அரசு மதிப்பளிப்பது போல தோன்றினாலும், இது இனிப்பு கலக்கப்பட்ட நஞ்சு என்பதுதான் உண்மை. மதுவணிகத்தை அதிகரிக்க அரசு துடிப்பதையே இது காட்டுகிறது.

தமிழ்நாட்டில் மதுக்கடைகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கிராமசபைகளுக்கு உண்டா? என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பிலும், பிற அமைப்புகளின் சார்பிலும் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த தலைமை நீதியரசர் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில், இந்நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டிருக்கிறது.ஏதேனும் ஒரு பகுதியில் புதிய மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் நிறுவனம் முயலும் போது, அதை எதிர்த்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கலாம்.அதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டியது கட்டாயம் அதன் மீது ஆட்சியர் முடிவெடுக்கும் வரை மதுக்கடைகளைத் திறக்க கூடாது. மாவட்ட ஆட்சியரின் முடிவில் உடன்பாடு இல்லை என்றால், அதை எதிர்த்து 30 நாட்களில் ஆயத்தீர்வை ஆணையரிடம் மேல்முறையீடு செய்யலாம் என அரசு அறிவித்திருக்கிறது.

தமிழக அரசின் இந்த நிலைப்பாடு என்பது புதிய மதுக்கடைகளை திறப்பது தொடர்பானது. இதிலும் கூட மதுக்கடைகள் திறப்பதை தடுக்கும் அதிகாரம் மக்களுக்கு வழங்கப்படவில்லை அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அதிகாரம் மட்டும்தான் வழங்கப்பட்டிருக்கிறது.மாறாக, மதுக்கடைகள் திறப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கும், ஆயத்தீர்வை ஆணையருக்கும் மட்டும் தான் வழங்கப்பட்டிருக்கிறது.இதில் மக்களுக்கு எந்தவித ஜனநாயக உரிமையும் வழங்கப்பட்டு விடவில்லை. அதனால், தமிழ்நாட்டின் மதுவணிகச்சூழல் எந்த வகையிலும் மாறிவிடாது என்பது தான் உண்மையாகும்.ஆனால், தமிழ்நாட்டின் இன்றைய தேவை புதிய மதுக்கடைகளைத் திறப்பது அல்ல. ஏற்கெனவே திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூடுவதுதான். அதற்காகத்தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.

2003 ஆம் ஆண்டு டாஸ்மாக் நிறுவனம் சில்லறை மது வணிகத்தைத் தொடங்கிய போது, தமிழ்நாட்டில் 7 ஆயிரத்திற்கும் கூடுதலான மதுக்கடைகள் இருந்தன.அடுத்த 14 ஆண்டுகளில் பாமக நடத்திய சட்டப்போராட்டம் -அரசியல் போராட்டங்களின் பயனாக ஆயிரத்திற்கும் கூடுதலான கடைகள் மூடப்பட்டன. அதனால், 2017-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கை 6323 ஆக குறைந்தன. தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கில், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3321 மதுக்கடைகள் தமிழகத்தில் மட்டும் மூடப்பட்டன. அதன் பயனாக, தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கை 3002 ஆக குறைந்தது. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து, சாதகமான தீர்ப்பை பெற்று, மூடப்பட்ட கடைகளில் 2400 கடைகளை மீண்டும் திறந்தது. அதனால், தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கை 5402 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பதால், மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என்பதுதான் அனைத்துத் தரப்பினரின் விருப்பமாகும்.
மாறாக, தமிழ்நாட்டில் புதிய மதுக்கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு முயல்கிறது. புதிய மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதால்தான், தமிழக அரசு அதற்கான விதிகளை வகுத்திருக்கிறது.தமிழ்நாடு மதுவால் சீரழிந்து வரும் நிலையில், மேலும், மதுக்கடைகளை திறப்பது தமிழகத்தையும்,தமிழகத்தின் இளைய தலைமுறையினரையும் மீட்க முடியாத அளவுக்கு சீரழித்துவிடும். அத்தகைய பாவத்தை தமிழக அரசு செய்துவிடக் கூடாது. எனவே புதிய மதுக்கடைகளை திறக்கும் முடிவை கைவிட்டு, ஏற்கெனவே உள்ள மதுக்கடைகளை மூடி, மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

22340cookie-checkஇந்த பாவத்தை செய்யாதிங்க தமிழக அரசுக்கு கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!