மாநாடு 4 March 2022
தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கையும் கடந்த 22ம் தேதி நடந்து முடிவடைந்தது.
இன்று மறைமுகத் தேர்தல்
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் இன்று வெள்ளலூர் பேரூராட்சியில் தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெற இருந்தது.இன்று மறைமுக தேர்தலுக்காக சென்றுகொண்டிருந்த அதிமுக உறுப்பினர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகளில் 31 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது. இருப்பினும் வெள்ளலூர் பேரூராட்சியை மட்டும் அதிமுக கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே வெள்ளலூர் பேரூராட்சியில் அதிமுக பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில் அவர்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலால் இரு தரப்பினரிடையே கடும் பிரச்சனை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக வெள்ளலூர் பேரூராட்சியில் மறைமுகத் தேர்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.மேலும் அந்தப் பேரூராட்சி தேர்தலில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க அப் பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவருகிறது.