மாநாடு 16 March 2022
தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்கள் முதல் தனியார் கட்டிடங்கள் வரை நகரம்,கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து இடங்களிலும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்ந்து நடந்து உள்ளது.அதிலும் அதிகமாக கடந்த 60 ஆண்டுகளில் நடந்துள்ளது என்பது யாராலும் மறுக்க முடியாத, மறைக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.இதையெல்லாம் மீட்டெடுத்து சரிசெய்ய வேண்டுமென்றால் யாருடனும் சமரசம் செய்யாத ஒரு சரியான அதிகாரியால் மட்டுமே முடியும் அவ்வாறு பார்க்கிறபோது இந்த வேலையை சமீப காலங்களில் சரியாக செய்வது நீர்வழிச் சாலைகளை மீட்டெடுப்பது என்பதை திறம்பட துணிச்சலாக செய்கின்ற ஒரு அதிகாரி தஞ்சாவூர் மாநகராட்சியின் ஆணையர் திரு. சரவணகுமார் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை மீட்டெடுத்து அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு இவரை போன்ற ஒரு அதிகாரி அந்தப் பகுதியில் இருந்து செயல்பட்டால் மட்டுமே தான் முடியும் என்ற நிலை உள்ளது.அதன்படி பார்த்தால் தஞ்சாவூரில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக அகற்றிய பிறகு தமிழ்நாடு முழுவதும் கூட இவரது மேற்பார்வையில் இவரை தலைமையாகக் கொண்டு கூட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை அரசு செய்தால் மட்டுமே நீர்நிலைகளை முழுவதுமாக மீட்டெடுக்க முடியும். இப்போது உள்ள சூழலில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விபரமாக அறிவோம் :
தமிழக வரலாற்றை எடுத்துக்கொண்டால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே , மதுரை, தஞ்சை, பூம்புகார், தொண்டி, காஞ்சி போன்ற பகுதிகள் நகரங்களாக இருந்து வந்துள்ளன. ஆனால் சென்னையின் வரலாறோ 3 அல்லது 4 நூற்றாண்டுகள் தான்.இருப்பினும் வெள்ளைக்காரர்களின் வரவுக்கு பின்னும், சுதந்திரத்திற்கு பின் வந்த ஆட்சியாளர்கள் சென்னைக்கு கொடுத்த முக்கியத்துவத்தின் காரணமாகவும் சென்னையை சுற்றியே அதிகம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியது.சென்னை மற்றும் அதன் புறநகர்களின் சொத்து மதிப்பு பலமடங்கு உயர்ந்தது.இந்த இடைப்பட்ட காலத்தில் நீர்வழி பாதைகள், மற்றும் பல நீர்நிலைகள், வீட்டு மனை பிரிவுகளாகவும், வேறு உபயோகங்களுக்காகவும் ஆக்ரமிக்கப்பட்டன.இது பொதுமக்கள் கண்முன்பாக நடந்த விஷயங்கள் தான். 60 வயதை கடந்த பெரியோர்களை கேட்டால், எங்கெங்கு ஏரி, குளம் இருந்து அவை காணாமல் போனது என்பதை தெளிவாக சொல்வார்கள். இவையெல்லாம் ஏற்கனவே தெரிந்த விஷயம் தான் என்றாலும், தற்போது நாட்டிலேயே அதிக அளவில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்ட மாநிலங்களில், தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக, மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது.
அப்போது அவர் தந்த தகவலின்படி, நாட்டில் உள்ள நீர்நிலைகள் குறித்த கணக்கெடுப்புகள், இதுவரை 5 முறை நடத்தப்பட்டுள்ள நிலையில், . 6வது முறையாக, கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட கணக்கெடுப்பு, தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிகிறது. அத்துடன் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், ஒட்டுமொத்தமாக 18 ஆயிரத்து 691 நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், நாட்டிலேயே அதிக அளவில் நீர்நிலை உள்ள மாநிலங்களாக, ஆந்திரா, அசாம், ஜார்கண்ட், தமிழ்நாடு, ஹிமாச்சல பிரதேசம், தெலங்கானா ஆகியவை உள்ளன என்றும், 8,366 நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக, கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இவ்வளவு நீர்நிலைகளை அழித்த போதும் கூட நீர்நிலைகள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு இருக்கிறது என்பதை படித்து அறிந்து தெரிந்து கொள்கிற மக்கள் நம் முன்னோர்கள் நமக்கு எவ்வளவு நன்மைகளை செய்து வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து இனிவரும் காலங்களிலாவது நமது அடுத்த சந்ததியினருக்கு இயற்கை வளங்களை பாதுகாத்து அவர்களுக்கு விட்டுவிட்டு செல்வதே நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும் என்பதை உணர்ந்து நடக்க வேண்டும்.