மாநாடு 16 March 2022
நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி பெருவாரியான இடங்களை கைப்பற்றியது. இருந்தபோதிலும் கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்த இடங்களில் மறைமுகத் தேர்தலில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் போட்டியிட்ட திமுகவினரை உடனடியாக பதவி விலக சொல்லி முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அறிக்கை விட்டிருந்தார். கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் காங்கிரஸ் கட்சி தலைவர்களும் இதே கோரிக்கையை முன் வைத்திரந்தார்கள்.
இதற்கு பதில் சொல்லும் விதமாக ஸ்டாலின் அவர்களும் ஒரு அறிக்கை விட்டிருந்தார் அந்த அறிக்கையில் கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்த இடங்களில் நின்று வெற்றி பெற்ற திமுகவினர் உடனடியாக தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன்னை வந்து பார்க்குமாறு கட்டளையிட்டிருந்தார். இந்த செயலுக்காக தான் கூனிக்குறுகி நிற்பதாக அறிக்கையில் கூறியதைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முதல்வர் ஸ்டாலினை அறிவாலயத்தில் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் அதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்தவர் இப்போது ஸ்டாலின் அவர்கள் மிகுந்த பக்குவமாக சிறந்த தலைவராக ஆகி விட்டார் என்று புகழாரம் சூட்டினார் ஆனால் விசிக வினர் பல இடங்களிலும் திமுகவினரை எதிர்த்து போராட்டங்கள் செய்துவந்தனர். மேலும் திமுகவின் தலைவர் ஸ்டாலின் அவர்களின் கட்டளையை ஏற்று ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் பதவி விலகி கூட்டணி கட்சிகளுக்கு அந்த இடங்களை தராமல் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த பின்னரும், ஆளும் திமுகவில் சச்சரவுகள் அடங்கியபாடில்லை. ஏனெனில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் போட்டி திமுக வேட்பாளர்கள் நின்று வெற்றி பெற்று நாற்காலியிலும் அமர்ந்துவிட்டனர். இந்த விஷயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவை யாரும் மதிப்பதாக தெரியவில்லை.
கூவத்தூர் ஸ்டைல்
குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தலைவர் பதவியை திமுக அபகரித்து கொண்டது. இதற்காக திமுக மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் 10 பேரை கூவத்தூர் ஸ்டைலில் அழைத்து சென்று திமுக நகரச் செயலாளர் சதீஷ் தனியார் விடுதியில் தங்க வைத்து கவனித்துள்ளார்.
அடாவடி செயல்பாடுகள்
இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுக தலைமை உத்தரவிட்டும், சாந்தியை பதவி விலக செய்யாமல் சதீஷ் அலட்சியம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு தினசரி வருகை தரும் சதீஷ், சாந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடாவடியான செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
தீராத தலைவலி
சமீபத்தில் தியானப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார் திரளாக சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அறிவாலயத்திற்கு வந்து சதீஷை நீக்க வேண்டும் என்று கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக புகார் கடிதம் ஒன்றையும் அளித்துள்ளனர். இந்த விஷயம் திமுக தலைமைக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தன்னை வெளியில் ஆளுமை மிக்க தலைவராக காட்டிக் கொண்ட போதிலும் கூட திமுகவினரே அவரது கட்டுப்பாட்டில் முழுமையாக இல்லை என்பதையே இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.