மாநாடு 18 March 2022
தேனி மாவட்டம் வருசநாடு, முருக்கோடை, தும்மக்குண்டு, மேகமலை, சிங்கராஜபுரம், பொன்னம் படுகை, தங்கம்மாள்புரம், குமணன்தொழு உள்பட 9 ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் இலவ மரங்கள் மற்றும் கொட்டை முந்திரி விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு புலிகள் சரணாலய பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இப்பகுதியில் மக்கள் விவசாயம் செய்யவும், நுழையவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
தற்போது இலவமர சீசன் நிலவும் நேரத்தில் விவசாயிகள் வனப்பகுதியிலேயே தங்கி மறுநாள் வருவது வழக்கம்.ஆனால் வனத்துறையினர் இரவு நேரத்தில் தங்கக்கூடாது என்று தடைவிதித்துள்ளனர். இதனையடுத்து அரசரடி, இந்திராநகர், மஞ்சலூத்து, கோம்பை உள்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த 9ம் தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் வனத்துறையினர் கெடுபிடி தொடர்வதால் தமிழக அரசுக்கு தங்களது நிலைமையை எடுதுக்குரைக்கும் வகையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட 9 கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கடமலைக்குண்டுவில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் இன்று தொடங்கியது.
இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வர தொடங்கினர். இதனால் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். எங்கள் வாழ்வாதாரத்தை தமிழக அரசு காக்கவேண்டும். இதற்கு நிரந்தர தீர்வு காணும் வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்