மாநாடு 23 March 2022
மதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. இரு துணைப் பொதுச் செயலாளர்கள், ஒரு தலைமைக் கழக செயலாளர், ஒரு தணிக்கைக் குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற இருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 21ஆம் தேதி மதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
அதே நேரம் சிவகங்கையில் சிவகங்கை மாவட்ட மதிமுக செயலாளர் சிவந்தியப்பன், விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தில் மதிமுகவை கலைத்துவிட்டு திமுகவில் இணைத்துவிடலாம் என்ற கருத்தை முன்வைத்தனர்.
வைகோ பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்ட போது அவரோடு சிறை சென்றவர் சிவந்தியப்பன். வைகோவோடு சுமார் முப்பதாண்டுகளுக்கும் மேலாக பயணித்தவர். அவரே வைகோவுக்கு எதிராக மாவட்ட செயலாளர்களை ஒருங்கிணைத்திருப்பது வைகோவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. முன்னதாக துரை வைகோவுக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கப்பட்ட போதே கட்சியின் முன்னோடிகள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
வைகோ தனது பேச்சுக்கே உண்மையாக இல்லையே என அவரோடு பயணித்தவர்கள் புலம்பத் தொடங்கினர்.
90 காலகட்டங்களில் வைகோ திராவிட முன்னேற்றக் கழகத்தில் மிகுந்த செல்வாக்கோடு வலம் வந்துகொண்டிருந்தார்.இது அப்போது திமுகவின் அடுத்த கட்ட தலைவராக ஸ்டாலின் வருவதற்கு இடையூறாக இருப்பார் வைகோ என்று கருதப்பட்டது.அதன் காரணமாக தான் வைகோ மீது பழி சுமத்தி திமுகவை விட்டு வெளியேற்றினார்கள் .
அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத வைகோவின் விசுவாசிகள் ஏறக்குறைய ஏழு பேர் தங்கள் இன்னுயிரை விட்டார்கள். அவர்களின் சாவுக்கு சென்ற வைகோ கண்ணீரோடு நின்று இனி ஒருபோதும் திமுகவோடு ஒட்டோ உறவோ கிடையாது என்று சபதம் செய்தார்.
அதன் பிறகு திமுக கொடி எனக்குத்தான் சொந்தம் என்று பேசத் தொடங்கினார்.ஆனால் அது தோல்வியுறவே திமுக கொடியில் கொஞ்சம் மாறுதல் செய்து தனக்கான கொடியை அறிமுகம் செய்து தமிழகத்தில் அதிக தூரம் நடைபயணம் செய்து தனக்கு ஆதரவான தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்தித்தார்.
அப்போது திமுகவிலிருந்து அதிமுக பிரிந்தபோது கூட இத்தனை மாவட்ட செயலாளர்கள் வரவில்லை, திரையுலகில் இவ்வளவு செல்வாக்கு வேறு எந்த தலைவருக்கும் இல்லாத அளவு வைகோ அவர்களுக்கு இருந்தது.தனி ஒரு இளைஞர் பட்டாளமே அவர் பின் அணிவகுத்தது. கட்சியின் பெயர் மதிமுக என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இனி யாருக்கும் எதற்கும் சமரசம் செய்யாமல் வெற்றி நடை போடும் என்று பிரகடனப்படுத்தினார்.
ஆனால் அடுத்து வந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார் அந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் ஜெயலலிதா அவர்களுக்கு மிகுந்த எதிர்ப்பு இருந்தது ஆனாலும் மதிமுக எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்தது.அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.
அதன் பிறகு நடந்த தேர்தலில் எந்த திமுகவை எதிர்த்து வாரிசு அரசியலை எதிர்த்து தனிக்கட்சி ஆரம்பித்தாரோ அந்த திமுகவோடு மதிமுக வெறும் 4 ஆண்டுகளில் கூட்டணி அமைத்தது.அப்போதே வைகோவின் நம்பகத்தன்மை அடிபட்டுப் போனது .அதனையும் மீறி தென் மாவட்டங்களிலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தங்களது தலைவர் தூய்மையானவர் என்று நம்பியிருந்த தொண்டர்கள் ஏராளம்.
அவர்களும் காலப்போக்கில் வைகோவின் நிலையற்ற நிலைப்பாட்டால் கூனிக்குறுகி தான் போனார்கள்.அதன் பிறகு அனைத்து காலகட்டங்களிலும் அரசியலில் தவறான நிலைப்பாட்டை மிக சரியாக செய்தவர் வைகோ மாற்றி மாற்றி பேசி தன் தொண்டர்களை அடகு வைத்தது போல ஆக்கிவிட்டாராம் வைகோ.
எப்போது யாரை எதிர்த்துப் பேச வேண்டும் எப்போது யாரை ஆதரித்த பேசவேண்டும் என்பது கூட தெரியாத நிலை ஒரு காலகட்டத்திற்குப் பிறகு மதிமுகவின் தொண்டர்கள் முதல் அடுத்த கட்ட தலைவர்கள் வரை குழம்பி நின்றதை தமிழகத்தின் அரசியலை பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் நன்கு அறிவர்.
பலமுறை மேடைகளில் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு பேசி விடுவதும், பிறகு அதற்கு எதிர்மறையாக செயலில் ஈடுபடுவதும் வைகோவிற்கு வாடிக்கையான ஒன்றுதான். உதாரணமாக குஜராத் மாடல் எப்படி சிறப்பானதோ அப்படியே இந்தியாவையும் சிறப்பாக வழிநடத்துவார் நரேந்திர மோடி என்று பேசுவதும் பிறகு கோபேக் மோடி என்று கருப்பு பலூன் பறக்க விட்டு எதிர்ப்பு தெரிவிப்பதும், தனக்காக தீக்குளித்து இறந்த தன் தொண்டர்களின் பிணங்களின் முன் நின்று இனி ஒரு போதும் திமுகவோடு கூட்டணி இல்லை என்று சபதம் ஏற்றதும், பிறகு அதே கூட்டணி அமைத்ததும் ,வாரிசு அரசியலை எதிர்ப்பதாக சொல்லி கட்சி ஆரம்பித்ததும் ,பிறகு அதே
வைகோ திமுகவின் கூட்டத்தில் வருங்கால முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே என்று உணர்ச்சி பொங்க பேசியதையும் பார்த்துக்கொண்டிருந்த தொண்டர்கள் மனம் வெதும்பி தான் போனார்கள்.
அப்போதே இனியும் மதிமுக தனித்து இயங்குவது என்பது சரி வராது திமுகவோடு மதிமுகவை இணைத்து விடலாம் என்ற கருத்து கட்சியினரிடையே எழ தொடங்கியது. அடுத்தடுத்த நிகழ்வுகளும் கட்சி இனி தனித்து இயங்க முடியாது என்பதையே உணர்த்தும் விதமாக அமைந்தது. அதன் வெளிப்பாடுதான் வைகோவின் நிலைப்பாட்டிற்கு எதிராக இப்போது மாவட்ட செயலாளர்கள் மதிமுகவின் முன்னோடிகள் பலரும் போர்க்கொடி தூக்கி இருப்பது.
இந்த நிலைப்பாட்டை பற்றி மூத்த பத்திரிகையாளர் சியாம் தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் கூறும்போது : திரு.வைகோ உட்பட மதிமுகவை சேர்ந்த வெற்றி பெற்ற பலரும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்று தான் வெற்றி பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அவர்களின் கட்சி மதிமுகவாக இருந்தாலும் இவர்கள் அனைவரும் திமுகவின் உறுப்பினர்கள் தான் என்றார்.
துரை வைகோவிடம் ஊடகவியாளர் கேட்கும்போது கடந்த 3 ஆண்டுகளாக கட்சியில் சர்வாதிகாரப் போக்கு நிலவுவதாகவும் அனைத்து முடிவுகளையும் நீங்களே தன்னிச்சையாக எடுப்பதாக கூறப்படுகிறதே என்கிற கேள்விக்கு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அப்படியே இருந்தாலும் கூட கடந்த 3 ஆண்டுகளாக கட்சி வளர்ச்சிப்பாதையில் தானே செல்கிறது என்கிறார்.
துரை வைகோ தலைமை கழக செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையெல்லாம் பார்க்கும்போது வைகோ அவர்கள் மதிமுக என்ற பெயரை முன்கூட்டியே சரியாகத்தான் வைத்திருக்கிறார் என்று என்ன தோன்றுகிறது பொறுத்திருந்து பார்ப்போம்.
மறுமலர்ச்சி திமுக வா அல்லது மறுபடியும் திமுகவா