மாநாடு 23 March 2022
தேனி மாவட்ட அரசு பள்ளியில் ஆசிரியர்களை கத்தியைக் காட்டி குத்திக் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததை போல கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் 6 இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் அத்துமீறி பள்ளி வளாகத்தில் உள்ளே நுழைந்து ஆசிரியர்களிடம் தகாத வார்த்தையால் பேசி சரமாரியாக கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து விசாரித்ததில் ஆசிரியர் ஒரு மாணவனை சரியான முறையில் முடிதிருத்தம் செய்து கொண்டு பள்ளி சீருடையில் பள்ளிக்கு வரச்சொன்னதாகவும் அதற்காக இந்த கொலை மிரட்டலை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் உயிர் பயத்தில், பள்ளிக்கு வெளியே நீதிகேட்டு ஆசிரியர்கள் தர்ணா போராட்டம் செய்தனர். ஏற்கனவே இப்பள்ளி ஆசிரியர்கள் மீது முகாந்தாரமற்ற பல்வேறு மொட்டபெட்டிசன்கள் அனுப்பி ஆசிரியர்களை பணிசெய்யவிடாது கடும் மன உலைச்சலுக்கு ஆளாக்கும் தொடர் அவலம் நடந்ததாகவும் ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகின்றது.
தொடர்ந்து ஆசிரியர்களின் மீது சமூக ஆர்வலர்கள் பெயரில் மாணவர்களை தூண்டிவிட்டு சமூக விரோத கும்பல் தாக்குதல் நடத்த முயற்சிக்கும் அட்டூழியம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் உயிர் பயத்தில் சக மாணவ,மாணவியர்கள், பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் சார்பில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்.இதுகுறித்து தோகைமலை காவல்நிலையத்தில் அனைத்து ஆசிரியர்கள் சார்பில் புகார் அளித்துள்ளனர்.
இது சம்பந்தமாக மூன்று மாணவர்கள் மற்றும் அப்பகுதிகளை சேர்ந்த நான்கு நபர்களை காவல்நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்தனர்.
தகவலறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பள்ளி ஆசிரியர்களிடம் எந்த பிரச்சனையாக இருந்தாலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். ஒரு சில ஆசிரியர்கள் அரசுப் பள்ளியின் பெயரை கெடுக்க வேண்டும் நோக்கத்தில் செயல்படுவதில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. அதன் பின் மூன்று மாணவர்ளுக்கு கவுன்சிலிங் தருவதாக ஆசிரியர்களே அழைத்து சென்றனர்.
அதன் பிறகு பைக்கில் பள்ளி வளாகத்தில் வட்டம் போட்டுக்கொண்டு மிரட்டல் விடுத்த 4 நபர்களிடம் தோகைமலை போலீசார் தொடர் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதி பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது