மாநாடு 25 March 2022
மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டிய புனிதமான சேவையில் தங்களை தாங்களே விருப்பப்பட்டு ஈடுபடுத்திக் கொள்ளும் உயரிய பணி தான் ஆசிரியர் பணி.
அப்படியாப்பட்ட பணியில் இருப்பவர்கள் சிலர் சமீபகாலமாக சமூகத்திற்குப் புறம்பான காரியங்களில் ஈடுபடுவது என்பது தூய்மையான ஆசிரியர்களுக்கு மனத் துன்பத்தை ஏற்படுத்தும் செயலாகும்.
ஒரு காலத்தில் எல்லாம் அறிவு பலம் அதிகமாக இருப்பவர்களுக்கு ஆசிரியப்பணி கொடுக்கப்பட்டது.
இக்காலத்தில் பெரும்பாலும் பணபலம் அதிகம் இருப்பவர்களுக்கே ஆசிரியப்பணி கொடுக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் பெண்ணிய விடுதலையை பேசுவதாக எண்ணிக் கொண்டு சமூக சீர்திருத்தவாதிகள் என்கிற பெயரில் சிலர். குடித்துவிட்டு தெருவில் விழுந்து கிடக்கும் குடிகார குடி நோயாளிகளுக்கு ,மது பிரியர்கள் என்றும் கணவன் இருக்கும் போதே, மனைவியும் மனைவி இருக்கும் போதே, கணவனும் கள்ளத்தனமாக தங்களது இச்சையை தீர்த்துக்கொள்ள தொடர்பு வைத்திருப்பவர்களை, முன்பெல்லாம் கள்ளக்காதலர்கள் என்பார்கள் இப்போது இருக்கின்ற சில முற்போக்குவாதிகள் என்று தங்களுக்கு தாங்களே அறிவித்துக் கொள்கின்ற சிலர் திருமணம் கடந்த உறவு என்று பெயர் மாற்றி அவர்களின் வருமானத்திற்காக தமிழ் சமூகத்தின் இன மானத்தை அடமானம் வைத்து வாழ்கிறார்கள்.
அதுபோன்ற போக்கால் தான் கடந்த ஏறத்தாழ பத்து நாட்களுக்கு முன்பாக திருச்சி பகுதியில் மாணவனை விட 10 வயது அதிகமுள்ள ஆசிரியையும் மாணவனும் வீட்டிற்கு தெரியாமல் சென்று திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததை யொட்டி இவர்களை தேடி வந்த காவலர்கள் கைது செய்துள்ளார்கள்.
விசாரணையில் மேலும் தெரியவந்திருப்பதாவது:
திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவன் வீட்டில் இருந்து மாயமானதாக தகவல் வெளியானது.அதுகுறித்து கேட்டபோது, அந்த மாணவனுக்கு கபடி விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்ததாலும் படிப்பில் கவனம் செலுத்த முடியாததாலும் வீட்டுக்கு பயந்து தலைமறைவாகி விட்டதாக கூறினர்.ஆனால், அந்த மாணவன் தன்னை விட அதிக வயது கொண்ட பள்ளி ஆசிரியையுடன் வெளியேறி திருமணம் செய்துகொண்ட செய்தி தெரியவந்திருக்கிறது.
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 11 ஆம் வகுப்பு மாணவன் கடந்த 5- ம் தேதி மாயமாகியுள்ளான்.அதே நாளில் அதே பள்ளியில் சிக்கத்தம்பூரைச் சேர்ந்த ஆசிரியையும் காணாமல் போயுள்ளார்.
ஒரே நாளில் இருவரும் மாயமாகியுள்ளதால் சந்தேகமடைந்த மாணவனின் பெற்றோர் 6ம் தேதி துறையூர் காவல் நிலையத்தில் தன் மகனைக் காணவில்லை என்றும் அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை மீது சந்தேகம் உள்ளதாகவும் புகார் கொடுத்துள்ளனர்.
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த துறையூர் காவல்துறையினர், ஆசிரியையின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர். அதில் ஆசிரியை திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிக்கு என மாறி மாறி சென்றது தெரியவந்தது. தேடல் வேட்டையை தொடங்கினர் காவல்துறையினர் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள ஆசிரியையின் தோழி வீட்டில் இருவரும் தங்கி இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து துறையூர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் கலைச் செல்வன் தலைமையிலான காவலர்கள் விரைந்து சென்று இருவரையும் துறையூர் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில், பள்ளியில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். மாணவன் மைனர் என்று தெரிந்தும் கூட இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.அதன்படி, சம்பவம் அன்று இருவரும் ஓட்டம் பிடித்து திருவாரூரில் சுற்றித் திரிந்து பின்னர் தஞ்சை பெரியகோவிலில் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொண்டதும், பின்னர் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள ஆசிரியையின் தோழியின் வீட்டில் கணவன், மனைவியாக தங்கியிருந்ததாகவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர் மைனர் என்பதால் பள்ளி ஆசிரியையை போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர் திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். பள்ளி சிறுவனுடன் ஆசிரியை ஓட்டம் பிடித்து திருமணமும் செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது