மாநாடு 26 March 2022
துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் இந்தியா உள்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளனர்.
5 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கண்காட்சி வருகிற 31ந்தேதி வரை நடைபெற உள்ளது. அந்தந்த நாடுகள் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அரங்குகள் அமைத்துள்ளன.
அந்தவகையில் இந்தியா சார்பில் உள்ள அரங்குகளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் திறந்து வைத்தார். அதன்படி துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சியில் பங்கேற்று முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழ்நாட்டு அரங்கினை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார்.தொழில் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கை முதலமைச்சர் நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாடு அரங்கில் மார்ச் 31-ம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.
உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் நேற்று இரவு தமிழ் நாகரீகத்தின் சிறப்பு ஒளிரப்பட்டது. இதனை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கண்டுகளித்தார்.