Spread the love

மாநாடு 26 March 2022

முன்பெல்லாம் முகம் தெரியாதவர்களிடமும், தராதரம் தெரியாதவர்களிடமும் எவ்வித வரவு செலவும் வைத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி யார் எவர் என்று தெரியாமலேயே செல்போனில் வரும் குறுஞ்செய்தி மூலமும் லோன் ஆப் என்கின்ற செயலிகள் மூலமும் பணம் வருகிறதே என்று கடன் வாங்கி விடுகிறார்கள்.

இதனால் பல்வேறு வகைகளில் பல்வேறு நிறுவனங்களால் அவமானப்படுத்தப்பட்டு தங்கள் உயிரை மாய்த்து கொள்கின்ற அளவிற்கு பல்வேறு நிகழ்வுகள் தினந்தோறும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. காவல்துறையும் இது போன்ற செயலிகளில் கடன் வாங்க வேண்டாம் என்று எச்சரிக்கைகள் செய்து வருகிறது.

அதையும் மீறி சிறு தொகை வாங்கிவிட்டு மன உளைச்சலில் ஆரம்பித்து தற்கொலை மரணம் வரை செல்கின்றனர் இன்றைய சமூகத்தினர் என்பது பெரும் அவலம் இது போன்ற நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.

லோன் ஆப்ஸ் எனப்படும் கடன் செயலிகளால் பலரும் தற்கொலைக்கு தள்ளப்படும் சூழல் உருவாகியிருக்கிறது. அங்கீகரிக்கப்படாத கடன் செயலிகளை பயன்படுத்தி எந்தவித மோசடியிலும் சிக்கிக்கொள்ள வேண்டாம் என காவல் துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் பலர் அவசர தேவைகளுக்காக இதுபோன்ற கடன் செயலிகளின் வலையில் விழுந்து விடுகிறார்கள்.  ஏற்கனவே கோவை செட்டிபாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் , ஸ்மார்ட் லோன் என்கிற கடன் செயலியில் பணம் பெற்றுள்ளார்.  வட்டி மேல் வட்டி என அதிக பணம் கேட்டு  மிரட்டவே அந்தப்பெண்  சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியை நாடினார். இதனையடுத்து  ஸ்மார்ட் லோன் நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியது.

இந்நிலையில் தற்போது  வட்டிக்கு மேல் வட்டி, தரக்குறைவான பேச்சு, ஆபாச மிரட்டல் என கண்ணுக்கு தெரியாத கடன் செயலி எனும் சிலந்தி வலைக்குள் சிக்கி கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார்.

மயிலாடுதுறை அடுத்த  ஏத்தக்குடியைச் சேர்ந்தவர் பாரதிராஜா (25) என்ற இளைஞர் கோவையில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில்  வேலை பார்த்து வந்துள்ளார். கணபதி பகுதியில்  தன் சகோதரர்களுடன்  தங்கி பணியாற்றி வந்த இவர் ஆப் மூலம் ரூ.12,108 கடன் பெற்றிருக்கிறார்.ஆனால் கடன் தொகையை சரியாக திருப்பிக்கட்டாமல் இருந்ததால் பாரதிராஜாவை, கடன் செயலி நிறுவனத்தார் தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

ஒரு தருணத்தில் பாரதிராஜவின்  போட்டோவை ஆபாசமாக சித்தரித்து , அதை அவரின் கான்டாக்டில் உள்ள அனைவரது எண்ணுக்கும் அனுப்பியிருக்கிறார்கள்.

இதனால் பாரதிராஜா மிகுந்த  மன உளைச்சலிலேயே இருந்து வந்துள்ளார்.வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து தூக்கிட்டு தற்கொலையும் செய்து கொண்டார். முன்னதாக  தன் சாவுக்கு கடன் ஆப் நிறுவனத்தின் ஊழியர்கள்தான் காரணம்.என கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.

பின்னர் அவரது  சகோதரர் வீட்டுக்கு வந்தபோது, பாரதிராஜா தூக்கில் தொங்குவதைக் பார்த்து அதிர்ச்சியடைந்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த சரவணம்பட்டி காவல்துறையினர்,  பாரதிராஜாவின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தைக்  கைப்பற்றி, தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

27190cookie-checkகடன் செயலியில் பணம் வாங்கியவர் தற்கொலை ஆபாச படம் அனுப்பிய நிறுவனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!