மாநாடு 30 March 2022
ராமநாதபுரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஜாதி ரீதியாக திட்டியதாக புகார் எழுந்துள்ள நிலையில் இவர் சர்ச்சைகளில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல என்றும், ஏற்கனவே இது போன்ற பல சர்ச்சைகளில் சிக்கியவர் தான் அமைச்சர் ராஜகண்ணப்பன். இந்நிலையில் அமைச்சரவையை மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளது திமுக.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக போக்குவரத்துறை அமைச்சருமான ராஜகண்ணப்பன் தற்போது அரசு அதிகாரி ஒருவரை சாதிய வன்மத்தோடு திட்டியிருப்பதாக அந்த அதிகாரி அதிரடி புகார் அளித்திருந்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரான ராஜேந்திரன் இவரை தான் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஜாதி ரீதியாக திட்டியதாக புகார் எழுந்துள்ளது.
அதிகாரி கூறுகையில் என்னை இப்படி யாரும் திட்டியது இல்லை. எனக்கு மனக்காயம் ஏற்பட்டுள்ளது. எனக்கு தூக்கம் இல்லை. சாப்பிட முடியவில்லை. இது பற்றி ஆட்சியர், துணை ஆட்சியரிடம் பேச முடியவில்லை. அதனால் இப்போது செய்தியாளர்களை சந்தித்து என் கஷ்டத்தை சொல்கிறேன் என்று முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
சமத்துவம் ,சமூக நீதி என்பது வெறும் மேடைப் பேச்சுக்கு தானா திமுக அமைச்சர்களுக்கு கிடையாதா என சமூக வலைதளங்களிலும் இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் தரப்பில் இந்த சம்பவம் குறித்து எவ்வித விளக்கமும் தராத நிலையில் அதற்கான காரணம் என்ன எனவும் கேள்வி எழுப்பப்படுகிறது. அதே நேரத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவது அடிக்கடி நடப்பதுதான்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ந்தேதி ராஜ கண்ணப்பனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்த அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து அவருடன் அமர்ந்து பேசுவது போல வெளியிடப்பட்ட புகைப்படம்தான் பெரும் சர்ச்சையை கிளப்பியது சோபாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் சாய்ந்தபடி அமர்ந்திருக்க பழைய பிளாஸ்டிக் சேரில் திருமாவளவன் அமர்ந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. போக்குவரத்து துணை ஆணையர் நடராஜன், தனது துறையில் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு பெற தகுதியுடையவர்களிடம் 3 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றதாக லஞ்சம் ஒழிப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நடத்திய சோதனையில் தான் கட்டுக் கட்டாக லஞ்சப் பணம் சிக்கியது. ஆனால் இதுகுறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் எதுவுமே கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
