மாநாடு 19 May 2022
ஒரு நாட்டின் எதிர்காலத்தை அதன் வளத்தை உருவாக்குவதாக இருப்பது கல்விக்கூடங்கள் அவ்வாறான பள்ளிக்கூடங்களில் சமீப காலமாக பாலியல் அத்துமீறல்கள் போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்று வருவதை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது .சில பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவிகளும் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டு அது சமூக வலைத்தளங்களில் வரும்போது சமூகத்தின் மீது அக்கறை கொண்டோருக்கும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட குழந்தைகளின் பெற்றோருக்கும் பேரதிர்ச்சி ஆகவும், பெரும் கவலையாகவும் இருக்கிறது. பாலியல் அத்துமீறல்களை தடுக்கும் விதமாக போக்சோ போன்ற சட்டங்களை நடைமுறைப் படுத்தி வந்தாலும் இன்னுமும் கூட பல பள்ளிக்கூடங்களில் பாலியல் தொல்லைகள் இருந்துகொண்டே தான் இருக்கிறது ,இதனை தடுக்கும் விதமாக அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ,ஆய்வுக் கூடங்களிலும் , கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் 2019ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அதன் முதல் கட்ட விசாரணையின்போது பெண் குழந்தைகள், பெண் ஆசிரியர்கள் உள்ளிட்டோர்களின் தனியுரிமை பாதிக்கப்படும் என்றும் குழந்தைகளின் பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் கருத்து கேட்காமல் அனுமதி பெறாமல் ண்காணிப்பு கேமராவை பொருத்துவது முறையாகாது என்றும் வாதிடப்பட்டது. பல கட்ட விசாரணைக்கு பிறகு அனைத்து கல்விக் கூடங்களிலும் கல்லூரிகளிலும் ஒருங்கிணைப்புக் குழு அமைத்து பாலியல் அத்துமீறலில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும், அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.