மாநாடு 31 May 2022
இது திராவிட பூமி இப்போது நடந்து கொண்டிருப்பது திராவிட மாடல் ஆட்சி ,சாதியை ஒழித்து விட்டோம் என்று ஒருபக்கம் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் இன்னொரு பக்கம் சாதியின் பெயரைச் சொல்லி சாதி வன்மத்தால் மாணவர்களே அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சென்ற மாதம் கூட நெல்லை மாவட்டத்தில் முக்கூடலில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவனை சாதிய பிரச்சனையால் சக மாணவர்களே அடித்து கொலை செய்தார்கள் .அந்த வடு ஆறுவதற்கு முன்பாகவே நேற்று நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்னொரு சம்பவம் நடந்திருக்கிறது அதன் விவரம் பின்வருமாறு :
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நேற்று முடிந்ததையடுத்து வழக்கம் போல வீடுகளுக்கு திரும்புவதற்காக மாணவர்கள் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது இரு தரப்பு மாணவர்கள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் மாணவர் ஒருவரது சட்டையை கிழித்து குப்பை தொட்டியில் போட்டு விட்டு அவரை பொது மக்கள் மத்தியில் அரை நிர்வாணமாக ஓடவிட்டு தாக்கியுள்ளனர்.
அதிர்ச்சி தரும் அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மோதலின் பின்னணியில் சாதிய தலையீடு இருப்பதாக பகீர் தகவல் வெளியானது. அதாவது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் பாளையங்கோட்டையில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பேருந்து நிலையத்தில் வைத்து கேக் வெட்டியுள்ளனர்.
இதில் 11ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சிலரும் பங்கேற்றுள்ளனர். அப்போது திடீரென இரு தரப்பினரிடையே சாதி ரீதியாக பேசியபோது தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த தகராறில் குலவணிகர்புரத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவன் மற்றும் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் இருவரையும் ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. குறிப்பாக கையில் நீல மஞ்சள் கயிற்றை கட்டியிருந்த மாணவனை சட்டையை கழட்டி நடுரோட்டில் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர்.
இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை யார் தரப்பிலும் புகார் அளிக்காத்தால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யவில்லை.
பள்ளிகளில் மாணவர்கள் சாதி அடையாள கயிறு கட்டக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்தும் உள்ளது.தற்போது நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே சாதிய மோதல் ஏற்பட்டு அது வெளி உலகிற்கு வந்து இருக்கும் இந்த நிகழ்வு சமூக ஆர்வலர்களையும் பெற்றோர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.