மாநாடு 4 June 2022
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து தொடர் கொள்ளைகளும் ,கொலைகளும் அதிகமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அதனால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டிருப்பதாகவும் எதிர்க்கட்சியான அதிமுக கூறிவந்தது.
இதனிடையே இரண்டு நாட்களுக்கு முன்பாக திருச்சியில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறும்போது தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 20 நாளில் 18 கொலைகள் நடந்து இருக்கின்றது இருந்தபோதும் ஸ்டாலின் சொல்கிறார் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று இதை எப்படி ஏற்பது என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் சட்டம்- ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவில் பணியாற்றிய 32 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
அதிலும் குறிப்பாக தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு காவல் ஆய்வாளர் நியமிக்கப்படாமல் இருந்தது. தற்போது தலைமை செயலக காலனி காவல் ஆய்வாளராக கமலகண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல பரபரப்பை ஏற்படுத்திய சிந்தாதிரிப்பேட்டை பாஜக பிரமுகர் பாலசந்தர் கொலை வழக்கில் சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். அந்த இடத்திற்கு தற்போது காவல் ஆய்வாளர் ராஜாராம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் வேப்பேரி, கோயம்பேடு, எழும்பூர் போன்ற 32 இடங்களுக்கு ஆய்வாளர்களை பணியிடை மாற்றம் செய்து காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார் இதனையொட்டி இவர்கள் அனைவரும் ஒரு வாரத்திற்குள் பணியிடை மாற்றம் செய்யப்பட்ட இடத்திற்கு செல்வார்கள் என்று தெரியவருகிறது.