மாநாடு 24 June 2022
அதிமுகவில் கடந்த சில தினங்களாக ஒற்றை தலைமை விவகாரம் தலை தூக்கி இருந்தது. ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் ஆங்காகே தங்கள் செல்வாக்கை காண்பித்து கொண்டிருந்தனர். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அதிகம் இருந்த நிலையில், நேற்று அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பொதுக்குழு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான வைத்தியலிங்கம் ஒலிவாங்கி முன்வந்து இந்த பொதுக்கூட்டம் சட்டத்திற்கு புறம்பாக நடக்கிறது என்று கூறி கூட்டத்திலிருந்து வெளியேறினார் அவரோடு ஓ.பி.எஸ்.ம் ,ஜே.சி.டி.பிரபாகரன் உள்ளிட்டவர்களும் வெளியேறினார்கள். இதன் காரணமாக ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பல இடங்களிலும் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரிப்பது அவருக்கு எதிராக முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தது ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்தது.
ஆனால் முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரிதாக தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தியதாக தெரியவில்லை.
ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் என்று கட்சியில் இரு அணிகளாக அதிமுகவினர் பிரிந்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர், பதவிகாலமும் நேற்றைய தினத்துடன் முடிவடைந்துள்ளது. இதன் பின் பொதுக்குழு கூட்டம் வருகின்ற ஜீலை 11 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் அதிமுகவில் உள்ள மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் கீழ் கட்சி இயங்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியது அனைவராலும் பேசப்பட்டு பேசுபொருளானது.
எடப்பாடி பழனிச்சாமி உடனான ஆலோசனைக்கு பின் சி.வி.சண்முகம் அளித்த பேட்டியில் கூறியதாவது : அனைத்து தீர்மானங்களையும் நிறைவேற்ற வேண்டும் என நீதிமன்றம் கூறவில்லை. ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதி ஆகிவிட்டது. பன்னீர் செல்வம் பொருளாளர், எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் மட்டுமே தற்போது நீடிக்கின்றனர். அதிமுகவின் சட்டவிதி 19ன் படி முறையாக பொதுக்குழுவை கூட்டினோம். பொதுக்குழுவை பற்றி வைத்திலிங்கம் அவதூறாக பேசியுள்ளார் என்று கூறினார்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில், திருச்சி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் புகைப்படம் பெயர்கள் சுவர் விளம்பரங்கள், தேசிய நெடுஞ்சாலை தடுப்பு கட்டைகளில் எழுதப்பட்ட ஓ பி எஸ் பெயர்களை விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகத்தின் வாய் மொழி உத்தரவின் பேரில் இன்று பெயிண்ட் அடித்து அதிமுகவினர் அழித்ததாக கூறப்படுகிறது. மேலும் அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படமும் பெயரும், விழுப்புரம் மாவட்டத்தில் தொண்டர்கள் அகற்றி வருவது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.