மாநாடு 28 June 2022
அரசுப்பள்ளிகளில் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்கில் 2019ஆம் ஆண்டு 2381 அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி, வகுப்புகள் தொடங்கப் பட்டது.
இந்நிலையில் ஜூன் மாதத் தொடக்கத்தில் அரசுப்பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் இந்த ஆண்டு நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டது, இதனை அடுத்து பல கட்சிகளும் பெற்றோர்களும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினார்கள் அதன் விளைவாக பள்ளிக்கல்வித்துறை அனைத்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அங்கன்வாடிகளில் செயல்படும் என்று அறிவித்தார். அதற்காக 2500 சிறப்பு ஆசிரியர்களும் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது ஆனால் பள்ளிகள் தொடங்கி இரு வாரங்கள் முடிந்த நிலையில் இதுவரை பள்ளியில் சேர்க்கைகள் நடைபெறவில்லை என்று பெற்றோர்கள் தெரிவிக்கின்றார்கள் இதனை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை விட்டிருக்கிறார் அதில் குறிப்பிட்டு இருப்பதாவது: குழந்தைகளைச் சேர்க்க பல்லாயிரக்கணக்கான பெற்றோர்கள் அரசு பள்ளிகளுக்கு படையெடுக்கின்றனர். ஆனால், மழலையர் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்து அவர்களுக்கு எந்த விளக்கமும் கிடைப்பதில்லை. மாறாக, இரண்டு வாரங்கள் கழித்து வாருங்கள் என்ற பதில் மட்டுமே கிடைக்கிறது.
ஆங்கிலமயமாக்கப்பட்ட கல்விச் சூழலில் தங்கள் பிள்ளைகள் மழலையர் வகுப்புகளில் பயில வேண்டும் என்பது பெற்றோர்களின் கனவாக உள்ளது. ஆனால், அனைத்து பெற்றோர்களுக்கும் தங்களின் பிள்ளைகளை தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் படிக்க வைக்கும் அளவுக்கு வசதி இல்லை.
அப்படிப் பட்ட பெற்றோர்களுக்கு அரசு பள்ளிகளில் நடத்தப்படும் மழலையர் வகுப்புகள் தான் வரப்பிரசாதமாக அமைந்திருந்தன. தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பல மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்து வகுப்புகளும் தொடங்கி விட்டன. ஆனால், அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்பு மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும் என்பது கூட தெரியாததால் பெற்றோர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தங்கள் குழந்தைகளின் கல்வி குறித்த கவலையில் அவர்கள் ஆழ்ந்துள்ளனர்.
அதேபோல், மழலையர் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடைமுறைகளும் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட பிறகு தான் மழலையர் வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்றால் அதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அதுவரை மழலையர்களின் கல்வி உரிமை பறிக்கப்படக் கூடாது.
ஏற்கனவே, மழலையர்களுக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களைக் கொண்டு மழலையர் வகுப்புகளை நடத்துவதற்கு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்ய வேண்டும்.
குழந்தைகளின் கற்றல் திறன் 3 வயதில் சிறப்பாக இருக்கும் என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் அந்தப் பருவத்தில் அவர்களுக்கு முறைச்சார்ந்த கல்வி வழங்குவது அவசியம் ஆகும். இதை உணர்ந்து அரசு பள்ளிகளில் செயல்பட்டு வரும் மழலையர் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
ஒரு வாரத்திற்குள் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்து, அடுத்த வாரம் முதல் வகுப்புகளைத் தொடங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.